விவசாய நிலத்தை வீட்டுமனையாக மாற்றுவதை தடுக்க நடவடிக்கை குறைதீர்க்கும் கூட்டத்தில் கிராம மக்கள் வலியுறுத்தல்
விவசாய நிலத்தை வீட்டுமனையாக மாற்றுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறைதீர்க்கும் கூட்டத்தில் பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
தஞ்சாவூர்,
தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தஞ்சையை அடுத்த புதுப்பட்டினத்தை சேர்ந்த கிராம மக்கள் 50-க்கும் மேற்பட்டவர்கள் திரண்டு வந்து கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-
புதுப்பட்டினம் கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தை நாங்கள் 5 தலைமுறையாக வாரிசு அடிப்படையில் குத்தகை பெற்று சாகுபடி செய்து வருகிறோம். இந்த நிலம் மன்னர் காலத்தில் சாதி, மதம் பாராமல் இலவசமாக வழங்கப்பட்டது. காரைக்குடியை சேர்ந்த ஒருவருக்கும் நிலம் கொடுக்கப்பட்டுள்ளது.
குத்தகை பதிவேட்டில் எங்களின் மூதாதையர்களின் பெயர்கள் பதிவுசெய்யப்பட்டும் நடப்பு தேதிவரை வாரிசு உரிமைப்படி நாங்கள் குத்தகைக்கு விவசாயம் செய்து வருகிறோம். இந்த நிலையில் காரைக்குடியை சேர்ந்தவர் நிலத்தை பட்டாமாற்றம் செய்துள்ளார். ஆனால் சாகுபடி அனுபவம் சிறு, குறு விவசாயிகளான எங்களிடமே உள்ளது.
இந்த நிலையில் அந்த நிலத்தை காரைக்குடியை சேர்ந்தவர் விற்பனை செய்துள்ளார். இதை எதிர்த்து வழக்கு தொடர்ந்துள்ளோம். நிலத்தை வாங்கியவர் அதனை மனைப்பிரிவாக மாற்றம் செய்ய நடவடிக்கை எடுத்துவருகிறார். எனவே அதை தடுத்து கிராம வாசிகளாகிய எங்களுக்கு இனாமாக பட்டா கொடுத்து சிறு மற்றும் குறு விவசாயிகளாகிய எங்களையும், விவசாயத்தையும் வாழவைக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
தஞ்சை பள்ளியக்ரஹாரம் பம்பிங்ஸ்டேசன் ரோடு குடியிருப்புவாசிகள் கொடுத்த மனுவில், “வெண்ணாற்றின் தென்கரையில் நாங்கள் 2 தலைமுறையாக வசித்து வருகிறோம். இதில் பாதிதூரம் தார்ச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. மீதி சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் உள்ளிட்ட அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே விரைவில் தார்ச்சாலை அமைக்க வேண்டும். மாநகராட்சி நீரேற்று நிலையம் அருகிலும், வெண்ணாற்றின் கரையில் வசிக்கும் எங்கள் பகுதியிலும் குடிநீர் குழாய் இல்லை. குடிநீர் குழாய் அமைத்து தருமாறு கேட்டுக்கொள்கிறோம்” என கூறப்பட்டு இருந்தது.
காவிரி டெல்டா விவசாயிகள் சங்க தலைவர் ரவிச்சந்தர் கொடுத்த மனுவில், “தஞ்சை மாவட்டத்தில் தற்போது ஆழ்துளை கிணறு மூலம் குறுவை சாகுபடி நடைபெற்று வருகிறது. மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா விவசாயிகள் நலன் கருதி குறுவை தொகுப்பு திட்டத்தை அறிவித்து 12 மணி நேரம் தடையில்லா மும்முனை மின்சாரம் மற்றும் பல்வேறு சலுகைகளை வழங்கினார். ஆனால் இந்த ஆண்டு குறுவை தொகுப்பு திட்டம் இன்னும் அறிவிக்கப்படவில்லை. எனவே குறுவை தொகுப்பு திட்டத்தை உடனே அறிவிக்க வேண்டும்” என கூறப்பட்டு இருந்தது.
தஞ்சை மாவட்டம் பூதலுரை அடுத்த விண்ணமங்கலத்தை சேர்ந்த விவசாயி மாலதி கொடுத்த மனுவில், “எங்கள் கிராமத்தில் உள்ள டி பிரிவு வாய்க்காலான தட்டாஞ்சி வாய்க்கால் பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கி உள்ளது. இதனால் தண்ணீர் பாய்ச்ச முடியாமல் விவசாயிகள் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே இந்த வாய்க்காலின் ஆக்கிரமிப்பை அகற்றி தண்ணீர் பாய்ச்ச உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கூறப்பட்டு இருந்தது.
Related Tags :
Next Story