ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தி தீக்குளிக்க முயன்ற தொழிலாளி - கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு


ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தி தீக்குளிக்க முயன்ற தொழிலாளி - கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு
x
தினத்தந்தி 16 July 2019 4:15 AM IST (Updated: 16 July 2019 2:09 AM IST)
t-max-icont-min-icon

ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற தொழிலாளியால் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல்,

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. இதையொட்டி காலையில் இருந்தே திண்டுக்கல் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் மனு கொடுப்பதற்காக கலெக்டர் அலுவலகத்தில் திரண்டனர். 

அவர்களிடம் மனுக்கள் பெறப்பட்டு பின்னர் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டனர். குறைதீர்க்கும் கூட்டம் என்றாலே கலெக்டர் அலுவலகம் முன்பு சிலர் தீக்குளிக்க முயல்வது வாடிக்கையாக இருந்து வந்தது.

ஆனால் நேற்று மதியம் 1 மணி வரை, மனு கொடுப்பதற்காக வந்தவர்களில் யாரும் தீக்குளிக்க முயலவில்லை. இதையடுத்து இன்று (அதாவது நேற்று) குறைதீர்க்கும் கூட்டம் எந்தவித பிரச்சினையும் இன்றி அமைதியாக நிறைவடையும் என்று கலெக்டர் அலுவலகம் முன்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் கருதி மகிழ்ச்சியடைந்தனர். ஆனால் சிறிது நேரத்திலேயே அவர்களின் மகிழ்ச்சி காணாமல் போனது.

குறைதீர்க்கும் கூட்டம் நிறைவடைவதற்கு சிறிது நேரமே உள்ள நிலையில் கலெக்டர் அலுவலகத்துக்கு 50 பேர் வந்தனர். அவர்களுடன் வந்த ஒருவரின் கையில் பிளாஸ்டிக் கேன் இருந்தது. அதை போலீசார் கவனிப்பதற்குள் அந்த நபர் கலெக்டர் அலுவலகம் முன்பு வந்து, கேனில் இருந்த மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதைப்பார்த்த போலீசார் விரைந்து சென்று அவரை தடுத்தனர். பின்னர் அவரிடம் விசாரணை நடத்தினர்.அப்போது அவர், வத்தலக்குண்டுவை அடுத்த சேவுகம்பட்டி பேரூராட்சி நாகலாபுரம் 6-வது வார்டை சேர்ந்த கூலித்தொழிலாளியான குழந்தை (வயது 50) என்பது தெரியவந்தது. மேலும் அப்பகுதியில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட நிலத்தை சிலர் ஆக்கிரமித்துள்ளதாகவும், அவர்களின் வழிபாட்டு தலத்தில் வைக்கப்பட்டிருந்த பொருட்கள் அகற்றப்பட்டுவிட்டதாகவும் போலீசாரிடம் அவர் தெரிவித்தார்.

அத்துடன் ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தி மாவட்ட நிர்வாகம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலரிடம் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காததால் தான் கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்கும் முடிவை எடுத்ததாக போலீசாரிடம் குழந்தை தெரிவித்தார். இதையடுத்து அவருடைய பிரச்சினை குறித்து கலெக்டரிடம் மனு அளிக்கும்படி கூறி போலீசார் அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து கலெக்டரிடம் குழந்தை தங்கள் பகுதி பிரச்சினை தொடர்பாக கோரிக்கை மனு அளித்தார். மனுவை பெற்ற கலெக்டர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். கலெக்டர் அலுவலகம் முன்பு தொழிலாளி தீக்குளிக்க முயன்ற சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story