முதுமலையில், கக்கநல்லா-தொரப்பள்ளி சாலையை கடக்கும் யானைக்கூட்டம் - கவனமுடன் செல்ல வாகன ஓட்டிகளுக்கு அறிவுரை


முதுமலையில், கக்கநல்லா-தொரப்பள்ளி சாலையை கடக்கும் யானைக்கூட்டம் - கவனமுடன் செல்ல வாகன ஓட்டிகளுக்கு அறிவுரை
x
தினத்தந்தி 16 July 2019 4:30 AM IST (Updated: 16 July 2019 3:37 AM IST)
t-max-icont-min-icon

முதுமலையில் கக்கநல்லா-தொரப்பள்ளி சாலையை யானைக்கூட்டம் அடிக்கடி கடக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் கவனமுடன் செல்ல வேண்டும் என்று வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

மசினகுடி,

நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகம் சுமார் 688 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டு உள்ளது. இங்கு காட்டுயானைகள், புலிகள், சிறுத்தைப்புலிகள், காட்டெருமைகள், கரடிகள் என பல்வேறு வகையான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இதில் காட்டுயானைகள் ஒவ்வொரு ஆண்டும் வறட்சி காலத்தில் பசுந்தீவனம், தண்ணீர் உள்ள இடங்களை தேடி இடம் பெயர்ந்து செல்கின்றன. பின்னர் நல்ல மழை பெய்து புற்கள் வளர்ந்து பசுமை திரும்பியவுடன் மீண்டும் இடம் பெயர்ந்து முதுமலைக்கு வருகின்றன. இந்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் ஏற்பட்ட கடும் வறட்சி காரணமாக காட்டுயானை கூட்டங்கள் சத்தியமங்கலம் வனப்பகுதிக்கு சென்றன. இதனால் முதுமலையில் காட்டுயானைகளை பார்க்க முடியாத நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில் முதுமலையில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக பெய்த மழை காரணமாக வனப்பகுதி பசுமை திரும்பி உள்ளது. மேலும் நீர் நிலைகளும் நிரம்பி உள்ளன. இதனால் இடம் பெயர்ந்து சென்ற காட்டுயானைகள் மீண்டும் முதுமலைக்கு திரும்பி வந்துள்ளன. இவ்வாறு வந்துள்ள காட்டுயானைக் கூட்டங்களில் 15 முதல் 35 யானைகள் வரை இருக்கின்றன. மேலும் குட்டி யானைகளும் அதிக எண்ணிக்கையில் உள்ளன. முதுமலையில் உள்ள புற்களை ருசித்து சாப்பிட்டு சுற்றித்திரியும் இந்த காட்டுயானைகள் காலை மற்றும் மாலை நேரங்களில் தொரப்பள்ளி-கக்கநல்லா தேசிய நெடுஞ்சாலை ஓரத்திற்கு வருவது அதிகரித்து உள்ளது. இவ்வாறு வரும் காட்டுயானை கூட்டங்களை அவ்வழியாக செல்லும் சுற்றுலா பயணிகள் கண்டு மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர். மேலும் புகைப்படம் எடுத்தும் மகிழ்கின்றனர். அப்போது காட்டுயானைகள் சுற்றுலா பயணிகளின் வாகனங்களை துரத்தும் சம்பவங்களும் நிகழ்கிறது.

அதில் சில காட்டுயானைக்கூட்டங்கள் ஒரு வனப்பகுதியில் இருந்து மற்றொரு வனப்பகுதிக்கு சாலையை அடிக்கடி கடந்து செல்கின்றன. இதனால் கக்கநல்லா-தொரப்பள்ளி தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களில் செல்பவர்கள் கவனமாக செல்ல வேண்டும் எனவும், காட்டுயானை கூட்டங்களின் அருகில் வாகனங்களை நிறுத்தி தொந்தரவு செய்ய கூடாது எனவும் வாகன ஓட்டிகளை புலிகள் காப்பக வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். மேலும் இதுபோன்ற அத்துமீறும் செயல்களில் ஈடுபடுபவர்களை கண்காணிக்க வனத்துறை ஊழியர்கள் தீவிரமாக ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

Next Story