கணபதி பகுதியில், அனுமதியற்ற வாரச்சந்தைகளுக்கு தடை விதிக்க வேண்டும் - கலெக்டரிடம் வணிகர்கள் மனு


கணபதி பகுதியில், அனுமதியற்ற வாரச்சந்தைகளுக்கு தடை விதிக்க வேண்டும் - கலெக்டரிடம் வணிகர்கள் மனு
x
தினத்தந்தி 16 July 2019 4:45 AM IST (Updated: 16 July 2019 5:04 AM IST)
t-max-icont-min-icon

கணபதி பகுதியில் அனுமதியற்ற வாரச்சந்தைகள் நடத்த அனுமதிக்க கூடாது என்று கலெக்டரிடம் வணிகர்கள் கோரிக்கை மனு அளித்தனர்.

கோவை, 

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு கலெக்டர் ராஜாமணி தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார்.

இதில் வீட்டுமனை பட்டா, சாலை வசதி, தெருவிளக்கு, ரேஷன் கார்டு, முதியோர் உதவித்தொகை உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் மனு அளித்தனர். அந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். முகாமில் கொடுக்கப்பட்ட மனுக்கள் விவரம் வருமாறு:-

பள்ளப்பாளையம் அருகே ஒட்டர்பாளையத்தை சேர்ந்த விவசாயிகள் அளித்த மனுவில், எங்கள் பகுதியில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் ஆழ்துளை கிணறுகளை அமைத்து தண்ணீரை எடுத்து லாரிகள் மூலம் விற்பனை செய்யப்படுகிறார்கள். இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விவசாய கிணறுகளில் தண்ணீர் வற்றி வருகிறது.

இதன் காரணமாக, தோட்டங்களில் உள்ள தென்னை, வாழை, கரும்பு உள்ளிட்ட பயிர்களுக்கு தண்ணீர் விட முடியாமல் கருகி வருகின்றன. எனவே ஆழ்துளை கிணறு அமைத்து லாரிகள் மூலம் தண்ணீர் விற்பனை செய்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது

ஒண்டிப்புதூர் சவுடேஸ்வரிநகர் குடியிருப்போர் நலச்சங்க செயலாளர் தேவராஜ் தலைமையில் பொது மக்கள் அளித்த மனுவில், கோவை கிழக்கு மண்டலம் 59- வது வார்டு சவுடேஸ்வரிநகரில் உள்ள ஓடை மற்றும் புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து, ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் கோவில் கட்ட முயற் சிக்கின்றனர். இது தொடர்பாக புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை.

எனவே ஓடை மற்றும் புறம்போக்கு நிலத்தை ஆக்கரமித்து, கோவில் கட்டுவதை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை கோவை மாவட்ட தலைவர் மாணிக்கம் தலைமையில் வணிகர்கள் அளித்த மனுவில், கோவையில் மளிகை கடை மற்றும் காய்கறி கடை வைத்து வியாபாரம் செய்ய மாநகராட்சி உரிமம், தொழில்வரி, விவசாய வேளாண்மை விற்பனை குழுவின் காய்கறி உரிமம், ஜி.எஸ்.டி., உணவு பாதுகாப்பு துறை, எடைக்கல், தீயணைப்பு உரிமம் என அனைத்து உரிமங் களையும் முறையாக பெற்று கடை நடத்தி வருகிறோம்.

ஆனால் 41-வது வார்டு கணபதி பாலமுருகன்நகர், 40-வது வார்டு வி.ஜி.ராவ் நகர் ஆகிய பகுதிகளில் தனியாருக்கு சொந்தமான இடங்களில் முறையாக அனுமதி பெறாமல் வாரச்சந்தைகள் அமைத்து காய்கறி வியாபாரம் செய்யப்படுகிறது. அனுமதியின்றி நடத்தப்படும் சந்தைகளால் கடைக்காரர்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. அரசுக்கும் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. எனவே அனுமதியின்றி வாரச்சந்தைகள் நடத்த தடை விதிக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.

கோவை ராமகிருஷ்ணாபுரம் பகுதி பொதுமக்கள் அளித்த மனுவில், கோவை- சத்தி ரோடு கணபதி ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை களில் மாலை நேரங்களில் அனுமதியின்றி வாரச்சந்தை நடைபெறுகிறது. அப்போது புத்தர் வீதி, சாரதாதேவி வீதி, விவேகானந்தர் வீதி போன்ற 10-க்கும் மேற்பட்ட வீதிகளில் சாலையை மறித்து, வாகனங்களை நிறுத்தப்படுகிறது. மேலும் காய்கறி கழிவுகளை அங்கேயே கொட்டி விட்டு செல்வதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே அங்கு சந்தை நடத்த அனுமதிக்க கூடாது என்று கூறப்பட்டு உள்ளது.

Next Story