எல்லா மொழிகளிலும் தேர்வு எழுத மத்திய அரசு அனுமதிக்க வேண்டும், விழுப்புரம் பொதுக்கூட்டத்தில் கே.எஸ்.அழகிரி பேச்சு


எல்லா மொழிகளிலும் தேர்வு எழுத மத்திய அரசு அனுமதிக்க வேண்டும், விழுப்புரம் பொதுக்கூட்டத்தில் கே.எஸ்.அழகிரி பேச்சு
x
தினத்தந்தி 16 July 2019 5:05 AM IST (Updated: 16 July 2019 5:05 AM IST)
t-max-icont-min-icon

மத்திய அரசின் வேலைவாய்ப்புகளில் எல்லா மொழிகளிலும் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்று விழுப்புரம் பொதுக்கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி பேசினார்.

விழுப்புரம்,

விழுப்புரம் மத்திய மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நேற்று இரவு விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள நகராட்சி திடலில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு மத்திய மாவட்ட தலைவர் ஆர்.டி.வி. சீனிவாசக்குமார் தலைமை தாங்கினார். நகர தலைவர் செல்வராஜ் வரவேற்றார். மாவட்ட பொருளாளர் தயானந்தம், அகில இந்திய காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் சிறுவை ராமமூர்த்தி, குலாம்மொய்தீன், ரங்கபூபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி, அகில இந்திய செயலாளர் சிரிவெல்லபிரசாத் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். அப்போது கே.எஸ்.அழகிரி பேசியதாவது:-

தமிழகத்திற்கு காமராஜரை போன்று நல்லது செய்தது யாரும் கிடையாது. எண்ணற்ற கல்விக்கூடங்களை திறந்துள்ளார். இந்தியாவிலேயே அதிகம் படித்த மக்கள் தமிழகத்தில் இருக்கிறார்கள் என்று சொன்னால் அதற்கு காமராஜர் தான் காரணம். இன்றைக்கு சமூகநீதி என்ற பெயரில் பல கட்சிகள் உள்ளன. நாங்கள்தான் சமூகநீதி காவலர் என்று சொல்கிறார்கள். ஆனால் சமூகநீதி தந்தவர் காமராஜர்தான். அதுபோல் இடஒதுக்கீடு வாங்கி கொடுத்தோம் என்று யார், யாரோ சொல்கிறார்கள். இந்தியாவிலேயே முதன் முதலாக இடஒதுக்கீட்டை பெற்றுத்தந்த பெருமை காமராஜரையே சாரும்.

கூட்டாட்சி தத்துவம் உள்ள இந்திய நாட்டில் இன்றைக்கு மத்திய அரசின் வேலைவாய்ப்புகளில் ஆங்கிலம், இந்தி, குஜராத்தி போன்ற மொழிகளில் தேர்வு எழுத வேண்டும் என்று சொல்கிறார்கள். எவ்வளவு புத்திசாலியாக இருந்தாலும் தாய்மொழியில் தான் சிறப்பாக தேர்வு எழுத முடியும். பிற மொழிகளில் தேர்வு எழுதினால் மதிப்பெண்கள் குறைவாகத்தான் கிடைக்கும். கடந்த 5 ஆண்டுகளில் ரெயில்வே நிலையங்கள், தபால் நிலையங்கள், பொதுத்துறை வங்கிகள், நெய்வேலி நிலக்கரி சுரங்கம் இப்படி எங்கு சென்றாலும் தமிழ் தெரியாதவர்கள் அதிகம் இருக்கிறார்கள். கலாசார படையெடுப்பு என்று நமக்கு தெரியாமலேயே நம்மை ஏமாற்றி வருகின்றனர். எல்லா மொழிகளிலும் தேர்வு எழுதலாம் என்று சொன்னால்தான் இந்தியா என்பது சிறந்த நாடாக இருக்க முடியும். இதை மத்திய அரசு புரிந்துகொள்ள வேண்டும்.

அரசியல் வேறு, சினிமா என்பது வேறு. ரஜினி யாரை ஆதரிப்பார் என்று எல்லோரும் எதிர்பார்க்கிறார் கள். ரஜினி யாரை ஆதரித்தால் நமக்கு என்ன? நான் கூட ரஜினி ரசிகர். சிவாஜிக்கு பிறகு ரஜினி படங்களை நான் அதிகம் பார்ப்பேன். ரஜினி அரசியல் தமிழகத்திற்கு ஒத்துவராது. அது அவருக்கே தேவையில்லாதது. அவரால் நடிக்க முடியும், வசனம் பேச தெரியும், எது தெரியுமோ அதைத்தான் அவர் செய்ய வேண்டும்.

தமிழக மக்களை நாம் அரசியல் ரீதியாக ஒன்றுதிரட்ட வேண்டும். அதற்கு முன்னோட்டமாக ஒவ்வொரு குளத்தையும் ஒரு மீட்டர் ஆழத்துக்கு தூர்வார காங்கிரஸ் கட்சி முடிவு செய்து அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. ஏனெனில் அ.தி.மு.க. அரசு, தவிக்கிற வாய்க்கு தண்ணீர் கொடுக்க முடியாமல் தவிக்கிறது. எடப்பாடி அரசால் ஒரு ஏரியை கூட தூர்வார முடியவில்லை. ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு தண்ணீர் கொண்டு வர ஒரு மாதம் ஆகிறது. இனிமேல் தண்ணீர் வந்தால்கூட அது தேவைப்படாது.

இவ்வாறு அவர் பேசினார்.

இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி துணைத்தலைவர் தாமோதரன், பொதுச்செயலாளர்கள் பொன்.கிருஷ்ணமூர்த்தி, ராஜேந்திரன், அருள்பெத்தைய்யா, முன்னாள் எம்.எல்.ஏ. முருகானந்தம், ஜானகிராமன், மாவட்ட தலைவர்கள் ஆர்.பி.ரமேஷ், ஜெய்கணேஷ், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் சுரேஷ்ராம், சிவா, வாசிம்ராஜா, மாவட்ட துணைத்தலைவர்கள் ராதாகிருஷ்ணன், விஜயரங்கன், நாராயணசாமி, குப்பன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

முடிவில் மாவட்ட பொதுச்செயலாளர் ராஜேஷ் நன்றி கூறினார்.

Next Story