கிரானைட் தொழிற்சாலைகளை மீண்டும் திறக்க அனுமதிக்க வேண்டும் - கலெக்டரிடம் மனு


கிரானைட் தொழிற்சாலைகளை மீண்டும் திறக்க அனுமதிக்க வேண்டும் - கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 16 July 2019 4:30 AM IST (Updated: 16 July 2019 5:44 AM IST)
t-max-icont-min-icon

கிரானைட் தொழிற்சாலைகளை மீண்டும் திறக்க அனுமதிக்க வேண்டும் என்று கலெக்டர் ராஜசேகரிடம் மனு அளிக்கப்பட்டது.

மதுரை,

மதுரை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் ராஜசேகர் தலைமை தாங்கி மனுக்களை வாங்கினார். தமிழ்நாடு கிரானைட் குவாரிகள், தொழிற்சாலைகள் மற்றும் அவற்றை சார்ந்த தொழிலாளர்கள் நலச்சங்கம் சார்பில் கொடுத்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

கடந்த 7 ஆண்டுகளாக மதுரை மாவட்டத்தில் உள்ள கிரானைட் குவாரிகள் அரசின் உத்தரவால் மூடப்பட்டுள்ளது. மக்கள் குடியிருப்பிற்கும், விவசாயத்திற்கும் பயனில்லாத பாறை உள்ள கிராமங்களில் அரசு அனுமதியோடு செயல்பட்டு வந்த கிரானைட் குவாரிகள் மூடப்பட்டுள்ளதால் மத்திய-மாநில அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

மூடிக்கிடக்கும் கிரானைட் குவாரிகளையும் மற்றும் தொழிற்சாலைகளையும் திறப்பதற்கு பல முறை வலியுறுத்தி மனு அளித்துள்ளோம். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் கடந்த சட்டமன்ற கூட்டத்தில் கனிமவளத்துறை அமைச்சர் தமிழ்நாட்டில் உள்ள கிரானைட் குவாரிகளை திறப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக கூறினார். ஆனால் இதுவரை திறக்கவில்லை. குவாரிகள் மூடியிருப்பதால் பல தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். எனவே கிரானைட் தொழிற்சாலைகளை மீண்டும் திறக்க அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பில் கொடுத்த மனுவில், எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டத்தில் பணியாற்றி வயது முதிர்வு காரணமாக பணி ஓய்வு பெற்ற சத்துணவு ஊழியர்களுக்கு ஓய்வு கால பணப்பயன்களான சிறப்பு சேமநலநிதி, ஒட்டு மொத்த தொகை உள்ளிட்ட பணப்பயன்கள் அனைத்தும் ஆண்டுக் கணக்கில் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது. இந்த தொகையினை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மாதாந்திர சிறப்பு ஓய்வூதியத்தை பிரதி மாதம் 3-ந் தேதிக்குள் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

தேவேந்திர குல வேளாளர் மக்கள் சபை சார்பில் கொடுத்த மனுவில், “மதுரை ரெயில் நிலையம் முகப்பில் பாண்டியர்களின் சின்னமான மீன் சிலை வைக்கப்பட்டு இருந்தது. சீரமைப்பு பணி என்ற பெயரில் அந்த மீன் சிலையை அகற்றி உள்ளனர். அங்கு மீண்டும் மீன் சிலை வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என்று கூறப்பட்டு இருந்தது. புரட்சி புலிகள் சார்பில் கொடுத்த மனுவில், எழுத்தாளர் தர்மன் எழுதிய புத்தகத்தில் ஆதிதிராவிடர்கள் மற்றும் பெண்கள் குறித்து இழிவாக எழுதப்பட்டுள்ளது. எனவே அந்த புத்தகத்தை தடை செய்ய வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

Next Story