மாவட்ட செய்திகள்

திருமணம் ஆனதை மறைத்து 3 மனைவிகளுடன் குடும்பம் நடத்திய அழகு கலை நிபுணர் தற்கொலை + "||" + Hiding from getting married Family run with 3 wives Suicide by the beauty artist

திருமணம் ஆனதை மறைத்து 3 மனைவிகளுடன் குடும்பம் நடத்திய அழகு கலை நிபுணர் தற்கொலை

திருமணம் ஆனதை மறைத்து 3 மனைவிகளுடன் குடும்பம் நடத்திய அழகு கலை நிபுணர் தற்கொலை
திருமணமானதை மறைத்து ஒருவருக்கு ஒருவர் தெரியாமல் 3 மனைவிகளுடன் குடும்பம் நடத்திய அழகுகலை நிபுணர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். உடலை வாங்க 3 பேரும் போட்டி போட்டு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரி,

தர்மபுரி மாவட்டம் தாண்டவம் கிராமத்தை சேர்ந்தவர் சிங்காரவேலு (வயது 32). அழகு கலை நிபுணர். தமிழகம், புதுவையில் பல்வேறு கிளைகள் உள்ள பியூட்டி பார்லரில் தர்மபுரி கிளையில் வேலை செய்து வந்தார். இவரது மனைவி சத்யா. இவருக்கு 2 குழந்தைகள் உள்ளன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தேனி பகுதியில் உள்ள கிளைக்கு மாறுதலாகி சென்றார். அப்போது அந்த பகுதியை சேர்ந்த தனலட்சுமி என்ற பெண்ணை காதலித்து அவரை திருமணம் செய்து கொண்டார். அவருக்கும் 2 குழந்தைகள் உள்ளன.


இந்தநிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மதுரையில் உள்ள கிளைக்கு சிங்காரவேலு மாறுதலாகி சென்றார். அப்போது அங்கு காவியா என்ற பெண்ணை காதலித்து கோவிலில் வைத்து அவரை திருமணம் செய்து கொண்டார். காவியாவுக்கு பெற்றோர் இல்லை என்று கூறப்படுகிறது. 3 மனைவிகளுடன் ஒருவருக்கு ஒருவர் தெரிந்து கொள்ளாத வகையில் ஏமாற்றி குடும்பம் நடத்தி வந்துள்ளார்.

கடந்த 20 நாட்களுக்கு முன்பு மதுரையில் 3-வது மனைவி காவியாவை விட்டு விட்டு புதுவை ரெட்டியார்பாளையத்தில் உள்ள ஒரு பியூட்டி பார்லரில் சிங்காரவேலு வேலைக்கு சேர்ந்தார். பூமியான்பேட்டை ஜவகர் நகரில் ஒரு வீட்டை வாடகைக்கு பிடித்து அதில் தங்கி இருந்தபடி அவர் வேலைக்கு சென்று வந்தார்.

தொடர்ந்து ஒருவருக்கு ஒருவர் தெரியாமல் தன்மீது சந்தேகம் ஏற்படாத வகையில் 3 மனைவிகளிடமும் செல்போனில் பேசி சிங்காரவேலு குடும்பம் நடத்தி வந்துள்ளார்.

இந்தநிலையில் காவியாவை தொடர்பு கொண்டு குடும்பம் நடத்த புதுவைக்கு வருமாறு சிங்காரவேலு அழைத்துள்ளார். ஆனால் காவியா அவரிடம் தன்னை முறைப்படி பதிவு திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பது உள்பட பல்வேறு நிபந்தனைகளை விதித்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் விரக்தி அடைந்த சிங்காரவேலு தான் வாடகைக்கு இருந்த வீட்டில் நேற்று முன்தினம் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது பற்றி தகவல் அறிந்து ரெட்டியார்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வீரபத்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சிங்காரவேலுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது செல்போனை கைப்பற்றி அதில் இருந்த எண்களை வைத்து உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

அப்போது தான் அவருக்கு 3 மனைவிகள் இருப்பது தெரியவந்தது. இவர்கள் 3 பேரும் புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து சிங்காரவேலுவின் உடலை ஒப்படைக்க கேட்டு உரிமை கொண்டாடினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இறுதியில் சிங்காரவேலுவின் உடல் அவரது முதல் மனைவி சத்யாவிடம் ஒப்படைக்கப்பட்டது.