ஊட்டியில், இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க விழிப்புணர்வு பேரணி


ஊட்டியில், இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க விழிப்புணர்வு பேரணி
x
தினத்தந்தி 17 July 2019 4:15 AM IST (Updated: 16 July 2019 11:52 PM IST)
t-max-icont-min-icon

ஊட்டியில் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

ஊட்டி,

நீலகிரியில் இயற்கை விவசாயம் செய்யும் மாவட்டமாக மாற்றும் திட்டத்தை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவித்து இருந்தார். இந்த திட்டத்தின் படி, நீலகிரி மாவட்டத்தில் செயற்கை உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் பயன்படுத்தாமல் இயற்கை முறையில் விவசாயம் செய்ய விவசாயிகளை ஈடுபடுத்தும் முயற்சியில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது. தோட்டக்கலைத்துறை சார்பில், இயற்கை வேளாண்மையை ஊக்குவிப்பது குறித்து விழிப்புணர்வு பேரணி ஊட்டியில் நேற்று நடைபெற்றது.

பேரணியை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தொடங்கி வைத்தார். ஊட்டி மத்திய பஸ் நிலையத்தில் தொடங்கிய பேரணி ராஜீவ்காந்தி ரவுண்டானா, லோயர் பஜார், மணிக்கூண்டு, கமர்சியல் சாலை, சேரிங்கிராஸ் வழியாக ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா வரை சென்றது. பேரணியில் மாறுவோம், மாறுவோம் இயற்கை விவசாயத்துக்கு மாறுவோம், நஞ்சில்லா விவசாயம் செய்வோம், ரசாயன இடுபொருட்களை தவிர்ப்போம் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை விவசாயிகள் கையில் ஏந்தி சென்றார்கள்.

பூங்காவில் நடந்த நிகழ்ச்சியில் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா விவசாயிகள் மத்தியில் பேசியதாவது:-

இன்றைய தினம் மகிழ்ச்சியான தினமாக உள்ளது. இயற்கை வேளாண்மையாக மாற்ற இயற்கை உரம், இயற்கை மருந்துகள் பயன்படுத்துவோம் என விவசாயிகள், பெண்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். நீலகிரியில் கடந்த காலத்தில் இருந்தே பிளாஸ்டிக் பொருட்கள் ஒழிப்புக்கு மக்கள் ஒத்துழைப்பு அளித்து வருகிறார்கள். இந்த மாவட்டம் இயற்கை விவசாயத்தில் தமிழகத்திலேயே முதல் மாவட்டமாகவும், இந்தியாவில் சிறந்த மாவட்டமாகவும் மாற்ற வாய்ப்பு உள்ளது.

கிராம மக்கள் தங்கள் விவசாயத்தில் பூச்சிகளை ஒழிக்க அதிகமான பூச்சிக்கொல்லி மருந்துகளை தெளிப்பதால், மாவட்டத்தில் உள்ள மக்கள் பாதிக்கப்படுகின்றனர். மேலும் மழைக்காலங்களில் ரசாயன மருந்துகள் சமவெளிக்கு சென்று குடிநீரில் கலந்து மாசுபடுவதால், புற்றுநோய் உள்ளிட்ட நோய்கள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. வணிக கடைகளில் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட காய்கறிகளுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. நீலகிரியில் இருந்து 45 விவசாயிகள் சிக்கிம் மாநிலத்துக்கு அழைத்து செல்லப்பட்டு, அங்கு மேற்கொள்ளப்படும் இயற்கை விவசாய தொழில்நுட்பம் குறித்து பயிற்சி பெற்று வந்து உள்ளனர்.

பயிற்சி பெற்றவர்களிடம் மற்ற விவசாயிகள் இயற்கை விவசாயம் குறித்து தெரிந்து கொள்ள முடியும். இயற்கை உரம் மற்றும் மருந்துகளால் விவசாய விளைபொருட்களின் உற்பத்தி குறையும். ஆனால், உரிய விலை கிடைக்கக்கூடும். இயற்கை விவசாயத்தை விவசாயிகள் மீது திணிப்பதாக நினைக்கக்கூடாது. இவ்வாறு அவர் பேசினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் நிர்மலா, தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர் சிவசுப்பிரமணியம் மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியின் இடையே பெய்த சாரல் மழையில், நனையாமல் இருக்க விவசாயிகள் குடைப்பிடித்தபடி நின்றனர். 

Next Story