கன்னிவாடி அருகே, குடிநீர் கேட்டு மறியல் செய்ய முயன்ற கிராம மக்கள்


கன்னிவாடி அருகே, குடிநீர் கேட்டு மறியல் செய்ய முயன்ற கிராம மக்கள்
x
தினத்தந்தி 17 July 2019 4:00 AM IST (Updated: 16 July 2019 11:52 PM IST)
t-max-icont-min-icon

கன்னிவாடி அருகே குடிநீர் கேட்டு சாலை மறியல் செய்ய முயன்ற கிராம மக்களை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.

கன்னிவாடி,

கன்னிவாடி அருகே உள்ள கசவனம்பட்டி ஊராட்சி குறளம்பட்டியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஒரு ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு, அதன்மூலம் குடிநீர் தொட்டியில் தண்ணீர் ஏற்றப்பட்டு வினியோகம் செய்யப்படுகிறது. ஆனால் வறட்சி காரணமாக ஆழ்துளை கிணற்றில் தண்ணீர் குறைந்தது.

இதனால் ஒரு வீட்டுக்கு ஒரு குடம் தண்ணீர் மட்டுமே வினியோகம் செய்யப்படுகிறது. இந்த தண்ணீர் அவர்களுக்கு போதுமானதாக இல்லை. இதனால் ஒரு குடம் தண்ணீர் ரூ.5-க்கு வாங்கி கிராம மக்கள் பயன்படுத்துகின்றனர். இதுதொடர்பாக ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பலமுறை மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் நேற்று காலை காலிக்குடங்களுடன் ஒட்டன்சத்திரம்-செம்பட்டி சாலையில் காரமடை பிரிவில் மறியல் செய்ய புறப்பட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் வட்டார வளர்ச்சி அலுவலர் மாலிக் மற்றும் கன்னிவாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் ஆகியோர் தலைமையில் போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

பின்னர் சாலை மறியல் செய்ய வந்த கிராம மக்களை தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது 10 நாட்களுக்குள் குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி கூறினர். இதை ஏற்றுக்கொண்ட கிராம மக்கள் சாலை மறியல் செய்யும் முயற்சியை கைவிட்டு கலைந்து சென்றனர். 

Next Story