தனிமனித உரிமைகளின் பாதுகாவலனாக நீதிமன்றங்கள் உள்ளன ஐகோர்ட்டு தலைமை நீதிபதி பேச்சு


தனிமனித உரிமைகளின் பாதுகாவலனாக நீதிமன்றங்கள் உள்ளன ஐகோர்ட்டு தலைமை நீதிபதி பேச்சு
x
தினத்தந்தி 16 July 2019 11:00 PM GMT (Updated: 16 July 2019 7:24 PM GMT)

தனிமனித உரிமைகளின் பாதுகாவலனாக நீதிமன்றங்கள் உள்ளன என்று ஐகோர்ட்டு தலைமை நீதிபதி வி.கே.தஹில் ரமானி பேசினார்.

திருச்சி,

திருச்சி மாவட்டம் மணப்பாறை-குளித்தலை சாலையில் ரூ.8 கோடியே 66 லட்சம் திட்ட மதிப்பீட்டில் ‘வீடியோ கான்பரன்சிங்’ வசதியுடன் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் மற்றும் நீதிபதிகளின் குடியிருப்பு கட்டப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா நேற்று மாலை நடைபெற்றது. இந்த புதிய வளாகத்தை சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி வி.கே.தஹில்ரமானி ‘ரிப்பன்’ வெட்டி திறந்து வைத்தார்.

இதனைத்தொடர்ந்து மணப்பாறை ஆர்மன்ஸ் மஹாலில் நடந்த விழாவில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தும், அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், நீதிபதிகள் குடியிருப்பு, திருச்சி நீதிபதிகளின் குடியிருப்புக்கு சுற்றுச்சுவர் மற்றும் குடிநீர் வசதி ஏற்படுத்துதல், துறையூர் சப்-கோர்ட்டு நீதிபதி குடியிருப்பு கட்டும் பணி ஆகியவற்றிற்கு அடிக்கல் நாட்டியும் தலைமை நீதிபதி வி.கே.தஹில்ரமானி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

வரலாற்று சிறப்புமிக்க திருச்சி

திருச்சி தமிழகத்தின் மத்திய பகுதி மட்டும் அல்ல. இது மிகவும் வரலாற்று சிறப்புமிக்க ஒரு மாவட்டமாகும். மலைக்கோட்டை உள்ளிட்ட ஏராளமான புராதன சின்னங்களும், ஆலயங்களும் நிறைந்த திருச்சி, பிரிட்டிஷ் ஆட்சி காலம் முதலே தனி மாவட்டமாக இயங்கி வருகிறது. தற்போதைய பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களும் முன்பு ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தவை தான். திருச்சி இந்தியாவின் முக்கியமான ஒரு கல்வி நகரமாகவும் விளங்கி வருகிறது. தமிழ்நாடு தேசிய சட்டப்பள்ளியும் திருச்சி ஸ்ரீரங்கத்தில் தான் உள்ளது.

திருச்சி மாவட்டத்தில் மணப்பாறை, முசிறி, துறையூர், லால்குடி ஆகிய இடங்களில் கோர்ட்டுகள் இயங்கி வருகின்றன. மணப்பாறையில் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், கூடுதல் உரிமையியல் நீதிமன்றம், ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டுகள் உள்ளன. இவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இ-கோர்ட்டு வசதியுடன் செயல்படும். மணப்பாறையில் சப்-கோர்ட்டு அமைக்கப்படவேண்டும் என்ற கோரிக்கை ஐகோர்ட்டின் பரிசீலனையில் உள்ளது.

பாதுகாவலன்

இந்திய ஜனநாயகத்தின் அடிப்படை கட்டமைப்புகளில் நீதித்துறை ஒரு முக்கிய தூணாக உள்ளது. சமுதாயத்தில் நீதித்துறை மீது மக்களுக்கு அதிக நம்பிக்கை, எதிர்பார்ப்பு உள்ளது. தனிமனிதனின் உரிமைகளையும், சுதந்திரத்தையும் பாதுகாக்கும் பாதுகாவலனாக நீதிமன்றங்கள் உள்ளன. ஆகவே மக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப கோர்ட்டுகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தவும், நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் ஐகோர்ட்டு தயாராக இருக்கிறது.

நீதித்துறை சிறப்பாக இயங்குவதற்கு வழக்கறிஞர்கள் மற்றும் வழக்கறிஞர் சங்கங்களின் ஒத்துழைப்பு மிக முக்கியமான ஒன்றாக இருக்கிறது. வழக்கறிஞர்கள் தங்களது கட்சிக்காரர்களுக்கு நீதித்துறையின் மீது நம்பிக்கை உண்டாகும் வகையில் சேவையாற்றவேண்டும். நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவாக முடிக்கவும், ஐகோர்ட்டு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அரசு தரும் ஒத்துழைப்பின் காரணமாக பல நீதிமன்றங்கள் சொந்த கட்டிடங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் தற்போது நீதித்துறையில் பெண் வழக்கறிஞர்களின் வரவு அதிகரித்து இருப்பது பாராட்டுக்குரியது. தற்போது பெண் மாஜிஸ்திரேட்டுகள் அதிகளவில் தேர்வாகி இருக்கிறார்கள். அவர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு தலைமை நீதிபதி வி.கே.தஹில் ரமானி பேசினார். ஆங்கிலத்தில் பேசிய அவர் தொடக்கத்தில் அனைவருக்கும் வணக்கம் என்று தமிழில் குறிப்பிட்டார். முடிவில் நன்றி வணக்கம் என்று தமிழில் கூறி தனது பேச்சை முடித்தார். தொடக்கத்தில் திருச்சி முதன்மை செசன்சு கோர்ட்டு நீதிபதி முரளிசங்கர் வரவேற்றார். முடிவில் திருச்சி தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கிருபாகரன் மதுரம் நன்றி கூறினார். பொதுப்பணித்துறையின் மேற்பார்வை பொறியாளர் சண்முகநாதன் திட்ட அறிக்கையை சமர்ப்பித்து பேசினார்.

நீதிபதிகள்

விழாவில் சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் எம்.துரைசாமி, சி.வி.கார்த்திகேயன், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோரும் பேசினார்கள். மாவட்ட கலெக்டர்கள் எஸ்.சிவராசு (திருச்சி), டி.ஜி.வினய் (அரியலூர்), அரியலூர் மாவட்ட முதன்மை செசன்சு நீதிபதி சுமதி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் ஜியாவுல் ஹக் (திருச்சி), சீனிவாசன் (அரியலூர்) மற்றும் திருச்சி, அரியலூர் மாவட்ட உரிமையியல், சப்-கோர்ட்டு நீதிபதிகள், மாஜிஸ்திரேட்டுகள், வழக்கறிஞர்கள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

Next Story