மங்களமேடு அருகே பழுதடைந்த மின்மாற்றிகளை சரிசெய்யக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்


மங்களமேடு அருகே பழுதடைந்த மின்மாற்றிகளை சரிசெய்யக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 16 July 2019 11:00 PM GMT (Updated: 16 July 2019 7:37 PM GMT)

மங்களமேடு அருகே பழுதடைந்த மின்மாற்றிகளை சரிசெய்யக்கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மங்களமேடு,

பெரம்பலூர் மாவட்டம், மங்களமேட்டை அடுத்துள்ள கீழப்புலியூர் கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். அவர்களின் வீடுகளுக்கு மின்சாரம் வினியோகம் செய்யும் வகையில் அந்த கிராமத்தில் 2 மின்மாற்றிகள் அமைக்கப்பட்டு, வீடுகளுக்கு மின்சாரம் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் 2 மின்மாற்றிகளும் கடந்த சில நாட்களுக்கு முன்பு பழுதடைந்து மின்தடை ஏற்பட்டது. இதையடுத்து மின்சார ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்து கீழப்புலியூர் கிராமத்தில் உள்ள வீடுகளுக்கு மின்சாரம் வினியோகம் செய்யும் வகையில் அருகில் உள்ள கிராமத்தில் உள்ள மின்மாற்றியில் இருந்து மின்இணைப்பு கொடுத்து மின்சாரம் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. ஆனாலும் அடிக்கடி மின்தடை ஏற்பட்டது.

சாலை மறியல்

இதனால் ஆழ்குழாய் கிணற்றில் இருந்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு தண்ணீர் ஏற்ற முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் அப்பகுதியை சேர்ந்த வேலைக்கு செல்வோர், பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் குறித்த நேரத்திற்கு செல்லமுடியாமல் அவதிப்பட்டு வந்தனர். இதையடுத்து பழுதடைந்த மின்மாற்றிகளை சரிசெய்ய வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனர். ஆனால் அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த கீழப்புலியூர் கிராம மக்கள் நேற்று காலை 8 மணியளவில் பழுதடைந்த மின்மாற்றிகளை உடனே சரிசெய்யக்கோரி கீழப்புலியூர் பஸ்நிலையம் அருகே கீழப்புலியூர்- பெரம்பலூர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடு பட்டனர்.

போக்குவரத்து பாதிப்பு

இதுகுறித்து தகவல் அறிந்த மங்களமேடு துணை போலீஸ் சூப்பிரண்டு தேவராஜன், வேப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர் மரியதாஸ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இதுகுறித்து எடுத்துரைத்து பழுதடைந்த மின்மாற்றிகளை உடனே சரிசெய்து, தடையின்றி மின்சாரம் வினியோகம் செய்யப்படும் என்று உறுதி அளித்தனர். இதனை ஏற்றுக்கொண்ட கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் கீழப்புலியூர்- பெரம்பலூர் சாலையில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story