கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை கண்மாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை


கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை கண்மாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை
x
தினத்தந்தி 17 July 2019 3:00 AM IST (Updated: 17 July 2019 1:57 AM IST)
t-max-icont-min-icon

கண்மாய் ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தி, கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.

கோவில்பட்டி,

கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தை தேசிய விவசாயிகள் சங்க தலைவர் ரங்கநாயகலு தலைமையில், இளையரசனேந்தல் கிராம மக்கள் நேற்று முற்றுகையிட்டனர். பின்னர் அவர்கள், உதவி கலெக்டர் விஜயாவிடம் கோரிக்கை மனு வழங்கினர்.

அந்த மனுவில், கோவில்பட்டி அருகே இளையரசனேந்தல் பெரியகுளம் கண்மாயில் சுமார் 2 ஏக்கருக்கும் அதிகமாக தனிநபர் ஆக்கிரமிப்பு செய்துள்ளார். இதுதொடர்பாக குருவிகுளம் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் புகார் அளித்தோம். இதையடுத்து கண்மாயில் அளவீடு செய்து, கற்கள் நட்டப்பட்டன. ஆனாலும் இதுவரையிலும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை. எனவே கண்மாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனே அகற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதேபோன்று கோவில்பட்டி சுப்பிரமணியபுரம் பகுதி மக்கள் ஊர் தலைவர் கனகராஜ் தலைமையில், கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் அவர்கள், உதவி கலெக்டரிடம் கோரிக்கை மனு வழங்கினர்.

அந்த மனுவில், கோவில்பட்டி சுப்பிரமணியபுரம் 2-வது தெருவில் சத்துணவு கூடம் அருகே தனிநபர் ஒருவர் சாலையை ஆக்கிரமித்து கட்டிடம் கட்டுகிறார். இந்த சாலை வழியாகத்தான் பல்வேறு பள்ளிகளுக்கும் மாணவ-மாணவிகள் சென்று வருகின்றனர். இதுகுறித்து ஏற்கனவே நகரசபை ஆணையாளர், தாசில்தாரிடம் மனு வழங்கினோம். இதையடுத்து சாலையில் தோண்டப்பட்ட பள்ளம் மூடப்பட்டது. தற்போது மீண்டும் அதே இடத்தில் கட்டுமான பணியை தொடங்கி விட்டார். எனவே சாலையில் உள்ள ஆக்கிரமிப்பை உடனே அகற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

மனுக்களை பெற்று கொண்ட உதவி கலெக்டர் விஜயா, இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி அளித்தார். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

Next Story