டாக்டர்கள் போராட்டம் எதிரொலி: அரசு ஆஸ்பத்திரியை சூறையாடியதாக 3 பேர் கைது


டாக்டர்கள் போராட்டம் எதிரொலி: அரசு ஆஸ்பத்திரியை சூறையாடியதாக 3 பேர் கைது
x
தினத்தந்தி 17 July 2019 4:00 AM IST (Updated: 17 July 2019 2:28 AM IST)
t-max-icont-min-icon

கரிக்கலாம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியை சூறையாடிய வழக்கில் 3 பேரை போலீசார் நேற்று கைதுசெய்தனர்.

வில்லியனூர்,

வில்லியனூர் அருகே உள்ள கரிக்கலாம்பாக்கத்தில் அரசு ஆஸ்பத்திரி உள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த ஆஸ்பத்திரிக்கு வில்லியனூர் திருக்காஞ்சி பகுதியில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றதாக ஜெயவேல் என்ற வாலிபரை அவருடைய உறவினர்கள் தூக்கி வந்தனர்.

ஜெயவேலை டாக்டர்கள் பரிசோதித்து பார்த்து அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக அறிவித்தனர். அதனால் அவருடைய உறவினர்கள் ஆத்திரம் அடைந்து ஆஸ்பத்திரியில் இருந்த மேஜை, கதவு ஆகியவற்றை உடைத்து நொறுக்கி சூறையாடினார்கள்.

பின்னர் ஜெயவேலின் உடலை எடுத்துச் செல்வதற்காக ஆஸ்பத்திரி வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த 108 ஆம்புலன்ஸ்வேனை தரும்படி டாக்டர்களிடம் கேட்டனர். ஆனால் 108 ஆம்புலன்ஸ் வேன் அவசர சிகிச்சை தேவைப்படுபவர்களை அழைத்துவர மட்டுமே பயன்படுத்த முடியும் என்று கூறி ஆம்புலன்ஸ்வேனை தர மறுத்தனர்.

அதனால் மேலும் ஆத்திரம் அடைந்த ஜெயவேலின் உறவினர்கள் ஆஸ்பத்திரி வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஆம்புலன்ஸ் வேன் கண்ணாடியையும் உடைத்து நொறுக்கி சேதப்படுத்தினர்.

இது தொடர்பாக அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள், கரிக்கலாம்பாக்கம் போலீசில் புகார் செய்தனர். அந்த புகாரின்பேரில் விசாரணை நடந்து வந்தது.

இந்த நிலையில் புகாரின்பேரில் போலீசார் விரைவாக விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கவில்லை என்று கோரியும், பணிபுரியும் ஆஸ்பத்திரி உள்ளிட்ட பணி இடங்களில் டாக்டர்கள், நர்சுகளுக்கு பணிபாதுகாப்பு இல்லை என்று கூறியும், பாதுகாப்பு வழங்கக்கோரியும் புதுச்சேரி மாநிலத்தில் அனைத்து ஆரம்ப சுகதார நிலையங்கள், அரசு ஆஸ்பத்திரிகளில் பணியாற்றும் டாக்டர்கள், நர்சுகள் ஒரு மணிநேரம் தங்கள் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டம் நேற்று முன்தினம் தொடங்கி நேற்று 2-வது நாளாக நீடித்தது.

இந்த போராட்டம் காரணமாக அரசு ஆஸ்பத்திரிக்கு வந்த புறநோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் டாக்டர்கள் போராட்டம் காரணமாக போலீசார் தங்கள் விசாரணையை விரைவுபடுத்தினார்கள்.

விசாரணையை தொடர்ந்து அரசு ஆஸ்பத்திரியில் ரகளையில் ஈடுபட்டு சூறையாடியதாக வில்லியனூரை அடுத்த திருக்காஞ்சிபேட் பகுதியை சேர்ந்த வாலிபர்கள் மணிகண்டன் (வயது 30), தர்மராஜ் (26), பார்த்திபன் (27) ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்தனர். மேல் விசாரணை நடந்து வருகிறது,

Next Story