‘நோ பார்க்கிங்’ பகுதியில் காரை நிறுத்திய மேயருக்கு அபராதம் போக்குவரத்து போலீசார் அதிரடி


‘நோ பார்க்கிங்’ பகுதியில் காரை நிறுத்திய மேயருக்கு அபராதம் போக்குவரத்து போலீசார் அதிரடி
x
தினத்தந்தி 17 July 2019 3:30 AM IST (Updated: 17 July 2019 2:34 AM IST)
t-max-icont-min-icon

நோ பார்க்கிங் பகுதியில் காரை நிறுத்திய மும்பை மேயருக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்தனர்.

மும்பை,

மும்பையில் பல சாலைகளில் வாகன நிறுத்தும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. ஆனால் அதன் அருகில் ‘நோ பார்க்கிங்’ பகுதியில் வாகனம் நிறுத்தினால் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் வில்லேபார்லே- அந்தேரி இடையே உள்ள கோல்டோங்கிரியில் ‘நோ பார்க்கிங்’ பகுதியில் மும்பை மேயர் விஸ்வநாத் மகாதேஷ்வரின் கார் நிறுத்தப்பட்டு இருந்தது. வாகன ஓட்டிகளிடம் மாநகராட்சி மிகப்பெரிய தொகையை அபராதமாக வசூலித்து வரும் நிலையில் மும்பை மேயரின் காரே ‘நோ பார்க்கிங்’ பகுதியில் நிறுத்தப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இது குறித்து விளக்கம் அளித்த மும்பை மேயர் விஸ்வநாத் மகாதேஷ்வர், ‘சம்பவத்தன்று வில்லேபார்லே- அந்தேரி ரோட்டில் உள்ள ஓட்டலில் சாப்பிட சென்று இருந்தேன். அப்போது எனது டிரைவர் ‘நோ பார்க்கிங்’ பகுதி என்பதை கவனிக்காமல் காரை நிறுத்தி உள்ளார். இது தவறு தான்” என கூறியிருந்தார்.

இந்தநிலையில் ‘நோ பார்க்கிங்’ பகுதியில் காரை நிறுத்தியதற்காக மும்பை போக்குவரத்து போலீசார், மேயருக்கு அபராதம் விதித்து அதிரடி நடவடிக்கை எடுத்தனர்.

இது குறித்து போலீஸ் இணை கமிஷனர் மதுக்கர் பாண்டே கூறுகையில், ‘‘மேயரின் கார் ‘நோ பார்க்கிங்’ பகுதியில் நிறுத்தப்பட்டு இருந்தது குறித்து எங்களுக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக நாங்கள் அங்கு சென்று பார்த்தோம். அதற்குள் கார் அங்கு இருந்து சென்றுவிட்டது. பின்னர் அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை ஆய்வு செய்து கார் ‘நோ பார்க்கிங்’ பகுதியில் நிறுத்தப்பட்டு இருந்ததை உறுதிசெய்தோம்.

இந்த சம்பவத்தில் மேயரின் காருக்கு அபராதம் விதித்து இ-செல்லான் அனுப்பி உள்ளோம்’’ என்றார்.

ஆனால் அபராத தொகை எவ்வளவு என்பதை பகிரங்கப்படுத்த போலீசார் மறுத்து விட்டனர்.

Next Story