பிறப்பு, இறப்பு சான்றிதழை ஆன்லைன் மூலம் பெறலாம் - சுகாதாரத்துறை அதிகாரி தகவல்
2018 மற்றும் 2019 ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்ட பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களை ஆன்லைன் மூலமாக இலவசமாக பதிவிறக்கம் செய்து பெற்றுக்கொள்ளலாம்.
சிவகங்கை,
சுகாதாரத்துறை துணை இயக்குனர் யசோதாமணி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பொதுமக்கள் தங்களது வீடுகளில் பிறப்பு, இறப்பு நிகழ்ந்தவுடன் 21 நாட்களுக்குள் அருகில் உள்ள சுகாதார ஆய்வாளர் அல்லது கிராம நிர்வாக அலுவலரிடம் தெரியபடுத்தி பதிவு செய்ய வேண்டும். குறிப்பிட்ட காலத்திற்குள் தகவல் தெரியபடுத்த தவறும்பட்சத்தில் தாமத பதிவு கட்டணம் செலுத்தி பதிவு செய்யப்பட வேண்டும். 2017-ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் தாமத கட்டணம் மற்றும் பிறப்பு, இறப்பு சான்றிதழ் கட்டணம் திருத்தி அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி 21 நாட்களுக்கு மேல் தாமதமானால் தாமத பதிவு கட்டணம் ரூ.100-ம், 1 மாதத்திற்கு மேல் தாமதமானால் ரூ.200-ம், 1 வருடத்திற்கு மேல் தாமதமானால் ரூ.500-ம் செலுத்த வேண்டும்.
மேலும் குழந்தையின் பெயரை ஒரு வருடத்திற்குள் இலவசமாக பதிவு செய்து கொள்ளலாம். ஒரு வருடத்திற்கு மேல் பெயரை பதிவு செய்ய தாமத கட்டணமாக ரூ.200 செலுத்தப்பட வேண்டும்.
இதேபோல் பிறப்பு, இறப்பு சான்றிதழ் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு வருடத்திற்கான தேடுதல் கட்டணம் ரூ.100 செலுத்தப்பட வேண்டும். சரியான பிறந்த தேதி அல்லது இறந்த தேதி குறிப்பிட்டால் தேடுதல் கட்டணம் செலுத்தப்பட வேண்டியதில்லை. ஒவ்வொரு பிறப்பு சான்றிதழ் மற்றும் இறப்பு சான்றிதழுக்கும் ரூ.200 செலுத்த வேண்டும். பதிவு இல்லா சான்றிதழுக்கு ரூ.100 செலுத்த வேண்டும். தற்போது ஆன்லைன் மூலமாக இலவசமாக பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் வழங்கும் நடைமுறை கடந்த மார்ச் மாதம் முதல் நடைமுறைபடுத்தப்பட்டு வருகிறது.
அதாவது 2018 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்ட பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களை ஆன்லைன் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த நடைமுறை படிப்படியாக பழைய ஆண்டு பதிவுகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story