அந்தியூர் அருகே பரிதாபம்; பவானி ஆற்றில் மூழ்கி வாலிபர் பலி
அந்தியூர் அருகே பவானி ஆற்றில் மூழ்கிய வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
அந்தியூர்,
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள பெத்தட்டி அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் பேரின்பராஜ். இவருடைய மகன் சசிகுமார் (வயது 19). கட்டிட தொழிலாளி. இந்தநிலையில் சசிகுமார் மற்றும் அதேப்பகுதியை சேர்ந்த மணிகண்டன் (29), மற்றொரு மணிகண்டன் என்கிற ரஞ்சித் (19), இன்னொரு மணிகண்டன் (21) ஆகியோர் கட்டிட வேலைக்காக ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள மைக்கேல்பாளையம் பகுதிக்கு வந்திருந்தனர். பின்னர் அவர்கள் 4 பேரும் அங்கேயே தங்கியிருந்து கட்டிட வேலையில் ஈடுபட்டு வந்தனர். இந்தநிலையில் நேற்று மாலை 3 மணி அளவில் சசிகுமார் உள்பட 4 பேரும் அந்தியூர் அருகே அத்தாணி பகுதியில் செல்லும் பவானி ஆற்றுக்கு குளிக்க சென்றனர். பின்னர் அவர்கள் அனைவரும் ஆற்றில் இறங்கி குளித்தனர். இதில் சசிகுமாரை தவிர மற்ற 3 பேரும் கரைக்கு வந்தனர்.
சசிகுமாார் கரைக்கு வராததை கண்டதும் அதிர்ச்சி அடைந்த 3 பேரும் ஆற்றில் இறங்கி தேடினார்கள். ஆனால் அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. உடனே அவர்கள் இதுபற்றி அந்தியூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்துசென்று ஆற்றில் மூழ்கிய சசிகுமாரை மீனவர்கள் உதவியுடன் தேடினார்கள். சுமார் 3 மணி நேரத்துக்கு பிறகு சசிகுமாரை தீயணைப்பு வீரர்கள் பிணமாக மீட்டனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் ஆப்பக்கூடல் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சசிகுமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஆற்றில் மூழ்கி இறந்த வாலிபரின் உடலை பார்த்து அவருடைய பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது பார்க்க மிகவும் பரிதாபமாக இருந்தது.
Related Tags :
Next Story