பேரணாம்பட்டு அருகே 150 அடி பள்ளத்தில் மினி லாரி கவிழ்ந்து 2 டிரைவர்கள் பலி
பேரணாம்பட்டு அருகே 150 அடி பள்ளத்தில் மினி லாரி கவிழ்ந்து 2 டிரைவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
பேரணாம்பட்டு,
ஆந்திர மாநிலம் வி.கோட்டாவில் இருந்து வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் உள்ள செங்கல் சூளைக்கு புளியமரத்துண்டுகளை ஏற்றிக்கொண்டு மினி லாரி ஒன்று பேரணாம்பட்டு அருகே உள்ள தமிழக எல்லையான பத்தலப்பல்லி மலைப்பாதை கொண்டை ஊசி வளைவில் வந்தது.
லாரியை குடியாத்தம் நெல்லூர்பேட்டையை சேர்ந்த டிரைவர் சிவா (வயது 43) என்பவர் ஓட்டி வந்தார். மற்றொரு டிரைவர் குடியாத்தம் காமாட்சியம்மன் பேட்டையை சேர்ந்த பரந்தாமன் என்பவரும் உடன் வந்தார்.
அதிக பாரத்துடன் மரத்துண்டுகளை ஏற்றி வந்த மினி லாரி தமிழக எல்லையான மலைப்பாதைக்குள் நுழைந்து அங்குள்ள வேகத்தடையில் வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென லாரி, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி மலைப்பாதையில் உள்ள குண்டத்துகானாறு என்ற இடத்தில் இடது பக்கத்தில் இருந்த இரும்பு தடுப்பு மற்றும் பாதுகாப்பு தடுப்பு சுவரில் மோதி அந்தரத்தில் பறந்து சென்று சுமார் 150 அடி பள்ளத்தில் கவிழ்ந்து நொறுங்கியது.
இந்த விபத்தில் லாரி டிரைவர்கள் சிவா, பரந்தாமன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதனை பார்த்து அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பேரணாம்பட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்துக்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். சுமார் 1½ மணி நேர போராட்டத்திற்கு பின்னர் 2 பேரின் உடலையும் மீட்டனர். இதுகுறித்து பேரணாம்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.