மல்லசமுத்திரம் ஒன்றியத்தில் ரூ.1 கோடியில் வளர்ச்சி பணிகள் கலெக்டர் ஆசியா மரியம் ஆய்வு


மல்லசமுத்திரம் ஒன்றியத்தில் ரூ.1 கோடியில் வளர்ச்சி பணிகள் கலெக்டர் ஆசியா மரியம் ஆய்வு
x
தினத்தந்தி 18 July 2019 4:45 AM IST (Updated: 17 July 2019 10:55 PM IST)
t-max-icont-min-icon

மல்லசமுத்திரம் ஒன்றியத்தில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆசியா மரியம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நாமக்கல், 

நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மின்னாம்பள்ளி, மொஞ்சனூர், கருங்கல்பட்டி அக்ரஹாரம், பருத்திப்பள்ளி, கொளங்கொண்டை உள்ளிட்ட ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.1 கோடியே 16 லட்சம் மதிப் பீட்டில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆசியா மரியம் நேரில் பார்வையிட்டார். இதன் தொடக்கமாக மின்னாம்பள்ளி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் ரூ.6 லட்சத்து 88 ஆயிரம் மதிப்பீட்டில் மின்னாம்பள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு சுற்றுச்சுவர்் அமைக்கப்பட்டு வரும் பணியினையும், கால்நடை மருத்துவமனை அருகில் ரூ.20 ஆயிரம் மதிப்பீட்டில் கால்நடைகள் நீர் அருத்தும் தொட்டி அமைக்கப்பட்டு உள்ள பணியினையும், கருங்கல்பட்டி அக்ரஹாரம் ஊராட்சியில் ரூ.8 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டப்பட்டு வரும் பணியினையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதேபோல் பருத்திபள்ளி ஊராட்சியில் ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பீட்டில் கருங்கல் தடுப்பணை அமைக்கப்பட்டு உள்ளதையும், ரூ.3½ லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தடுப்பணை அமைக்கப்பட்டுஉள்ளதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மின்னாம்பள்ளி ஊராட்சியில் தாய் திட்டத்தின் கீழ் ரூ.24 லட்சத்து 11 ஆயிரம் மதிப்பீட்டில் வெள்ளவாரி ஏரியில் சிறுபாசன குளம் அமைக்கும் பணியையும் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மலர்விழி, மல்லசமுத்திரம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கோமதி, செல்வகுமார் உள்பட ஒன்றிய பொறியாளர், உதவி பொறியாளர்கள், பணி மேற்பார்வையாளர்கள் கலந்து கொண்டனர்.

Next Story