இளம் செஞ்சிலுவை சங்கம் மூலம் தனித்துவம் பெற்ற மாணவர்களை உருவாக்க வேண்டும் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பேச்சு


இளம் செஞ்சிலுவை சங்கம் மூலம் தனித்துவம் பெற்ற மாணவர்களை உருவாக்க வேண்டும் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பேச்சு
x
தினத்தந்தி 17 July 2019 11:00 PM GMT (Updated: 17 July 2019 5:27 PM GMT)

இளம் செஞ்சிலுவை சங்கம் மூலம் தனித்துவம் பெற்ற மாணவர்களை உருவாக்க வேண்டும் என்று பெரம்பலூர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி தெரிவித்தார்.

பெரம்பலூர்,

பெரம்பலூரில் மாவட்ட இளம் செஞ்சிலுவை சங்க இயக்கத்தின் (ஜூனியர் ரெட் கிராஸ்) முதல் பருவ கவுன்சிலர்கள் கூட்டம் நேற்று நடந்தது. இதற்கு பெரம்பலூர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அருளரங்கன் தலைமை தாங்கினார். மாவட்ட கல்வி அலுவலர்கள் மாரி மீனாள் (பெரம்பலூர்), குழந்தைராஜன் (வேப்பூர்), இந்தியன் செஞ்சிலுவை சங்கத்தின் (இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி) கவுரவ மாவட்ட செயலாளர் ஜெயராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அருளரங்கன் செஞ்சிலுவை சங்கத்தை நிறுவிய ஜான் ஹென்றி டுனாண்ட்வின் உருவப்படத்தை திறந்து வைத்து பேசுகையில், பாடத்துடன் கூடிய இணைச் செயல்பாடான இளம் செஞ்சிலுவை சங்கம் மூலம் தனித்துவம் பெற்ற மாணவர்களையும், தன்னம்பிக்கை, துணிந்து முடிவெடுத்து ஆற்றலுடன் திகழும் வகையில் மாணவர்களை உருவாக்க கவுன்சிலர்கள் பாடுபட வேண்டும்.

மேலும் மனிதநேயம் அழிந்து பயங்கரவாதம் மற்றும் வன்முறை தலைவிரித்தாடுகிறது. இதனால் மாணவர்கள் இளம் வயதிலேயே தவறான வழிக்கு செல்கின்றனர். இதனை மடை மாற்றம் செய்து சிறந்த குடிமகன்களாக விளங்க இளம் செஞ்சிலுவை சங்க கவுன்சிலர்கள் பாடுபட வேண்டும் என்றார்.

இந்திய மெடிக்கல் அசோசியேசின் மாவட்ட செயலாளர் டாக்டர் ராஜாமுகம்மது நோயில்லா உலகம் என்ற தலைப்பில் பேசினார். இளம் செஞ்சிலுவை சங்கத்தின் மாவட்ட கன்வீனர் ராதாகிருஷ்ணன் சங்கத்தின் செயல்பாடுகள் மற்றும் கவுன்சிலர்களின் கடைமைகள், மாநிலங்களுக்கிடையே மற்றும் மாநில அளவில் நடைபெறும் பயிற்சி முகாமில் கவுன்சிலர்கள், மாணவர்கள் பங்குபெறும் விதம் பற்றி பேசினார். வட்டார கல்லூரி அலுவலர்கள் ராமதாஸ், செந்தாமரை செல்வி (பெரம்பலூர்), ஜோதிலட்சுமி, இளங்கோவன் (வேப்பந்தட்டை), சாந்தப்பன் (ஆலத்தூர்) ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். கூட்டத்தில் மண்டல அலுவலர்களாக காசிராஜா, ரகுநாதன், ஜெயக்குமார் ஆகியோர் புதிய பொறுப்பாளர்களாக பொறுப்பேற்று கொண்டனர். கூட்ட நிகழ்வுகளை இணை கன்வீனர்கள் தொகுத்து வழங்கினர். முன்னதாக இளம் செஞ்சிலுவை சங்கத்தின் மாவட்ட பொருளாளர் கருணாகரன் வரவேற்றார். முடிவில் இணை கன்வீனர் துரை நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை மண்டல அலுவலர்கள் செய்திருந்தனர்.

Next Story