நெல்லை உதவி கலெக்டர் அலுவலக பொருட்கள் ‘ஜப்தி’ கையகப்படுத்திய நிலத்திற்கு இழப்பீடு வழங்காததால் கோர்ட்டு அதிரடி


நெல்லை உதவி கலெக்டர் அலுவலக பொருட்கள் ‘ஜப்தி’ கையகப்படுத்திய நிலத்திற்கு இழப்பீடு வழங்காததால் கோர்ட்டு அதிரடி
x
தினத்தந்தி 18 July 2019 4:45 AM IST (Updated: 17 July 2019 11:55 PM IST)
t-max-icont-min-icon

அரசுக்கு நிலம் கொடுத்தவருக்கு ரூ.14 கோடி பாக்கி உள்ளதால் நெல்லை உதவி கலெக்டர் அலுவலக பொருட்களை கோர்ட்டு ஊழியர்கள் திடீரென ‘ஜப்தி‘ செய்தனர்.

நெல்லை, 

நெல்லை அரசு என்ஜினீயரிங் கல்லூரிக்கு நாகர்கோவில் சாலையில் அமைந்துள்ள 15 ஏக்கர் நிலம் கடந்த 1984-ம் ஆண்டு கையகப்படுத்தப்பட்டது. இந்த நிலம் நாகர்கோவில் பயோனியர் குழுமத்துக்கு சொந்தமானது. இதுகுறித்து அந்த குழுமத்தின் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு இழப்பீடாக ரூ.20 கோடி வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.

இதையடுத்து 2005, 2012-ம் ஆண்டுகளில் இழப்பீடாக மொத்தம் ரூ.6 கோடி வழங்கப்பட்டது. ஆனால், மீதம் உள்ள ரூ.14 கோடி வழங்கவில்லை. இதற்கிடையே, இந்த நிலத்துக்கு இழப்பீட்டு தொகையை குறைக்கக்கோரி நெல்லை உதவி கலெக்டர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். ஏற்கனவே சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டபடி இழப்பீடு தொகையை வழங்க வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

ஆனாலும், நிலம் கொடுத்தவருக்கு அரசு சார்பில் பாக்கித்தொகை வழங்கப்படவில்லை. இதையடுத்து பயோனியர் குழுமத்தின் வாரிசுதாரர்கள், நெல்லை சப்-கோர்ட்டில் நிறைவேற்றுதல் மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த அந்த கோர்ட்டு, நெல்லை உதவி கலெக்டர் அலுவலகத்தை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். பின்னர் ஜப்தி செய்வதற்காக பயோனியர் குழுமத்தின் வாரிசுதாரர்கள், அவர்களது வக்கீல்கள் மற்றும் கோர்ட்டு ஊழியர்கள் நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள நெல்லை உதவி கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று பகல் 12 மணி அளவில் வந்தனர்.

அவர்கள், உதவி கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மேஜை, நாற்காலி, அலமாரி, மின்விசிறி, ஏ.சி. உள்ளிட்டவைகளை எடுக்க முயன்றனர். அதற்கு உதவி கலெக்டர் அலுவலக ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். வக்கீல்கள் கோர்ட்டு உத்தரவை காட்டினர்.

இதையடுத்து போலீஸ் பாதுகாப்புடன் அசையும் பொருட்கள் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்களை கோர்ட்டு ஊழியர்கள் ‘ஜப்தி‘ செய்து மினிலாரி மூலம் கொண்டு சென்றனர். பின்னர் அந்த பொருட்கள் கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டு பாதுகாப்பான இடத்தில் வைக்கப்பட்டது. உதவி கலெக்டர் அலுவலக பொருட்கள் ‘ஜப்தி‘ செய்யப்பட்ட சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story