குறைந்த தண்ணீர் விழுந்தாலும் இதமான சூழல்: குற்றாலம் அருவிகளில் குளிக்க வரிசையில் காத்திருந்த சுற்றுலா பயணிகள்
குறைந்த தண்ணீர் விழுந்தாலும் இதமான சூழல் நிலவுவதால் குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர்.
தென்காசி,
குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் சீசன் இருக்கும். இந்த ஆண்டு கடந்த ஜூன் மாதம் 10-ந் தேதி சீசன் தொடங்கியது. அதுவும் 2 நாட்கள் மட்டும் சீசன் நன்றாக இருந்தது.
பின்னர் இதன் நிலை மாறி வெயில் அடித்தது. சில நாட்களில் மீண்டும் அருவிகளில் தண்ணீர் அதிகரித்து கொட்டியது. ஆனால் அது நீடிக்கவில்லை. கடந்த சில நாட்களாக சாரல் மழை பெய்யவில்லை.
இதனால் அருவிகளில் தண்ணீர் வரத்து குறைந்தது. மழை இல்லாத சூழலிலும் குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி ஆகிய அருவிகளில் குறைவாக தண்ணீர் விழுந்து வருகிறது. ஐந்தருவியில் ஆண்கள் குளிக்கும் பகுதியில் சற்று அதிகமாகவும், பெண்கள் குளிக்கும் பகுதியில் சுமாராகவும் தண்ணீர் விழுகிறது. மெயின் அருவியில் ஆண்கள் குளிக்கும் பகுதியில் சுமாராக தண்ணீர் விழுகிறது. ஐந்தருவியில் அதிக தண்ணீர் வரும்போது அந்த தண்ணீர் படகு குழாமிற்கு வரும்.
ஆனால், இந்த ஆண்டு மழை இல்லாததால் படகு குழாம் வறண்டு கிடக்கிறது. இதனால் இன்னும் படகு சவாரி தொடங்கப்படவில்லை. தற்போது சீசன் மந்தமாக உள்ளதால் சுற்றுலா பயணிகளின் கூட்டம் வெகுவாகவே குறைந்து விட்டது.
நேற்று குற்றாலத்தில் மேகமூட்டமாக இருந்தது. குளிர்ந்த காற்று வீசியது. மிதமான வெயில் அடித்தது. இதனால் இங்கு இதமான சூழல் நிலவுவதால் அருவிகளில் குறைவாக விழும் தண்ணீரில் சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து குளித்து மகிழ்ந்தனர்.
கேரளாவில் மூன்று நாட்கள் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. இந்த சூழலில் குற்றாலத்தில் சாரல் மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சாரல் மழை பெய்தால் தான் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரிக்கும்.
Related Tags :
Next Story