விளாத்திகுளம் அருகே மின்னல் தாக்கி விவசாயி சாவு


விளாத்திகுளம் அருகே மின்னல் தாக்கி விவசாயி சாவு
x
தினத்தந்தி 18 July 2019 3:15 AM IST (Updated: 18 July 2019 12:22 AM IST)
t-max-icont-min-icon

விளாத்திகுளம் அருகே மின்னல் தாக்கி விவசாயி பலியானார்.

விளாத்திகுளம், 

விளாத்திகுளம் அருகே சின்னவநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் தங்கசாமி. இவருடைய மகன் பாலமுருகன் (வயது 27). விவசாயியான இவர் ஆடு, மாடுகளை வளர்த்து வந்தார். இவருடைய மனைவி மாரீசுவரி. இவர்களுடைய மகள் மாலினி (2). மாரீசுவரி நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார்.

நேற்று முன்தினம் காலையில் பாலமுருகன் வழக்கம்போல் தனது ஆடு, மாடுகளை அங்குள்ள காட்டு பகுதியில் மேய்ச்சலுக்கு அழைத்து சென்றார். பின்னர் மாலையில் அப்பகுதியில் மேகங்கள் திரண்டு, பலத்த இடி, மின்னல் தாக்கியது.

இதனால் பாலமுருகன் அங்குள்ள தோட்டத்தில் வேப்ப மரத்தின் அடியில் ஒதுங்கி நின்றார். அப்போது அவர் மீது மின்னல் தாக்கியதில், உடல் கருகி பலத்த காயம் அடைந்து மயங்கி விழுந்தார்.

இரவில் நீண்ட நேரமாகியும் அவர் தனது வீட்டுக்கு திரும்பி வராததால், அவரைத் தேடி உறவினர்கள் காட்டு பகுதிக்கு சென்றனர். அப்போது அங்கு மயங்கி கிடந்த அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக விளாத்திகுளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்த புகாரின்பேரில், சங்கரலிங்கபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) நாகலட்சுமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story