முத்தையாபுரத்தில் மாநகராட்சி தெற்கு மண்டல அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம்
சொத்துவரி உயர்வை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முத்தையாபுரத்தில் உள்ள மாநகராட்சி தெற்கு மண்டல அலுவலகத்தில் நேற்று கம்யூனிஸ்டு, தமிழக வாழ்வுரிமை கட்சியினர் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
ஸ்பிக்நகர்,
தூத்துக்குடி மாநகராட்சியில் சொத்து வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும், தெற்கு மண்டல பகுதியில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வேண்டும், குண்டும், குழியுமாக காணப்படும் சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, தெற்கு மாவட்ட தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் முத்தையாபுரத்தில் உள்ள மாநகராட்சி தெற்கு மண்டல அலுவலகம் முன்பு நேற்று காலை காத்திருப்பு போராட்டம் நடந்தது.
போராட்டத்துக்கு தூத்துக்குடி புறநகர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் ராஜா, தமிழக வாழ்வுரிமை கட்சி தெற்கு மாவட்ட செயலாளர் மாரிச்செல்வம் ஆகியோர் தலைமை தாங்கினர். போராட்டத்தில் சொத்து வரி உயர்வை ரத்து செய்யக் கோரி கோஷம் எழுப்பினர்.
இதைத் தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். வீட்டு வரிஉயர்வை குறைப்பது தொடர்பாக பரிசீலனையில் உள்ளது, வரிகுறைப்பு உத்தரவு வரும் வரை பொதுமக்களை சொத்து வரி, வீட்டுவரி செலுத்த நிர்பந்திக்க மாட்டோம். குடிநீர் தட்டுப்பாட்டை போக்கவும், சாலையை சீரமைக்கவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். அதன்பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.
போராட்டத்தில் ஸ்பிக்நகர் வட்டார வியாபாரிகள் சங்க தலைவர் ரத்தினதுரை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் பேச்சிமுத்து, மாவட்ட குழு உறுப்பினர் பூமயில், புறநகர் குழு உறுப்பினர் ராமசாமி, முருகன், வெள்ளைசாமி, கிளை செயலாளர்கள் சுப்பையா, கிருஷ்ணபாண்டி, வீரபெருமாள், தமிழக வாழ்வுரிமை கட்சி தெற்கு மாவட்ட தலைவர் கனி, துணைத்தலைவர்கள் செல்லத்துரை, அந்தோணிசாமி, ஓட்டப்பிடாரம் ஒன்றிய செயலாளர் சிங்கதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story