கள்ளப்பெரம்பூர் செங்கழுநீர் ஏரியை தூர்வாரும் பணி 10 கிராம மக்கள் ஒன்று சேர்ந்து தொடங்கினர்


கள்ளப்பெரம்பூர் செங்கழுநீர் ஏரியை தூர்வாரும் பணி 10 கிராம மக்கள் ஒன்று சேர்ந்து தொடங்கினர்
x
தினத்தந்தி 18 July 2019 4:15 AM IST (Updated: 18 July 2019 12:43 AM IST)
t-max-icont-min-icon

கள்ளப்பெரம்பூரில் உள்ள செங்கழுநீர் ஏரியை தூர்வாரும் பணியை 10 கிராம மக்கள் ஒன்று சேர்ந்து தொடங்கி உள்ளனர்.

கள்ளப்பெரம்பூர்,

மேட்டூர் அணை மற்றும் கல்லணை திறக்கப்பட்டு காவிரி, கொள்ளிடம், வெட்டாறு, வெண்ணாறு, புதுஆறு உள்ளிட்ட ஆறுகளில் அதிக அளவு தண்ணீர் வந்தாலும் அதை தேக்கி வைக்க முடியாத நிலையிலேயே தஞ்சை மாவட்டத்தில் உள்ள குளங்கள், ஏரிகள் உள்ளன. குளங்களும், ஏரிகளும் புதர் மண்டி காட்சி அளிக்கின்றன.

பழமையான ஏரிகளுள் ஒன்றான தஞ்சை மாவட்டம் கள்ளப்பெரம்பூரில் உள்ள செங்கழுநீர் ஏரியின் நிலைமையும் இது தான். மாமன்னன் ராஜராஜ சோழனின் ஆட்சி காலத்தில் வெட்டப்பட்ட செங்கழுநீர் ஏரி 642 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும். காவிரி ஆறு மூலமாக இந்த ஏரியில் தண்ணீர் நிரம்புகிறது. இதன் ஏரி மூலமாக 2,262 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

8 மதகுகளை கொண்ட செங்கழுநீர் ஏரியை சுற்றி கிழக்கு மற்றும் வடக்கு திசைகளில் மட்டுமே கரைகள் உள்ளன. மேற்கு, தெற்கு பகுதிகளில் கரைகள் கிடையாது. இந்த பகுதியின் முக்கிய நீர் ஆதாரமாக திகழ்ந்து வரும் செங்கழுநீர் ஏரியை தூர்வாரி பல ஆண்டுகளாகி விட்டன.

ஏரி முழுவதும் புதர் மண்டி, மண் மேடாக காட்சி அளிக்கிறது. இதன் காரணமாக ஏரியில் தண்ணீர் நிரம்புவதில் சிரமம் ஏற்பட்டது. ஏரி நிரம்பாததால் இந்த பகுதியில் நிலத்தடி நீர் மட்டமும் குறைந்தது. இதையடுத்து ஏரியை தூர்வார கள்ளப்பெரம்பூர், தென்னங்குடி, பிள்ளையார்நத்தம், சீராளூர், சக்கரசாமந்தம், வடகால், ராயந்தூர், குணமங்களம், சித்தாயல், சித்திரக்குடி ஆகிய 10 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் முடிவு செய்தனர்.

அதன்படி 10 கிராம மக்களும் ஒன்று சேர்ந்து நேற்று ஏரியை தூர்வாரும் பணியை தொடங்கினர். 2 பொக்லின் எந்திரங்கள், டிராக்டர்கள் மூலமாக நேற்று தூர்வாரும் பணிகள் நடந்தன. இதில் ஏரியில் அடர்ந்து வளர்ந்திருந்த புதர்கள் அகற்றப்பட்டன.

தூர்வாரும் பணியில் ஈடுபட்ட பெண்கள் பலர், அரிவாள்கள் மூலமாக ஏரியை சுற்றி வளர்ந்திருந்த கருவேல மரங்களை வெட்டி அப்புறப்படுத்தினர். தூர்வாரும் பணி 45 நாட்களுக்கு தொடர்ந்து நடைபெறும் என கிராம மக்கள் தெரிவித்தனர். 

Next Story