அரியலூரில் நாளை புத்தக திருவிழா கவர்னர் பன்வாரிலால் புரோகித் தொடங்கி வைக்கிறார்


அரியலூரில் நாளை புத்தக திருவிழா கவர்னர் பன்வாரிலால் புரோகித் தொடங்கி வைக்கிறார்
x
தினத்தந்தி 18 July 2019 4:45 AM IST (Updated: 18 July 2019 1:01 AM IST)
t-max-icont-min-icon

அரியலூரில் நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ள புத்தக திருவிழாவை கவர்னர் பன்வாரிலால் புரோகித் தொடங்கி வைக்கிறார்.

அரியலூர்,

அரியலூரில் தமிழ் பண்பாட்டுப் பேரமைப்பு சார்பில் புத்தக திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெறவுள்ளது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்வதற்காக தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் நாளை அரியலூருக்கு வருகை தரவுள்ளார். அதற்காக கவர்னர் பன்வாரிலால் புரோகித் நாளை சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி விமானநிலையத்திற்கு மதியம் வந்தடைகிறார். பின்னர் அவர் கார் மூலம் மதியம் 2 மணிக்கு பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் பங்களா அருகே உள்ள சுற்றுலா மாளிகைக்கு வந்தடைகிறார்.

இதையடுத்து கவர்னர் பன்வாரிலால் புரோகித் மாலை 4 மணியளவில் பெரம்பலூர் ஸ்ரீ சாரதா மகளிர் கலை கல்லூரி வளாகத்தில் திருவெம்பாவை கட்டிடத்தை திறந்து வைத்து, மாவட்ட அளவிலான திருப்பாவை, திருவெம்பாவை ஒப்புவித்தல் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி சிறப்புரையாற்றுகிறார். கவுரவ விருந்தினராக பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தா பங்கேற்கிறார். பரிசளிப்பு விழாவினை முடித்து கொண்டு அரியலூருக்கு கார் மூலம் கவர்னர் பன்வாரிலால் புரோகித் மாலை 4.30 மணியளவில் சென்றடைகிறார். அங்கு அவரை அரியலூர் மாவட்ட கலெக்டர் டி.ஜி.வினய் வரவேற்கிறார். பின்னர் அரியலூரில் தமிழ் பண்பாட்டுப் பேரமைப்பு சார்பில் அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டு திடலில் நாளை முதல் வருகிற 29-ந் தேதி வரை நடைபெறும் புத்தக திருவிழாவினை கவர்னர் பன்வாரிலால் புரோகித் தொடங்கி வைத்து அரங்குகளை பார்வையிட்டு சிறப்புரையாற்றுகிறார்.

இதற்கு தமிழ்பண்பாட்டு பேரமைப்பு தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்குகிறார். செயலாளர் ராமசாமி வரவேற்று பேசுகிறார். அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன், எம்.எல்.ஏ.க்கள் ராமச்சந்திரன், ராமஜெயலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டு பேசுகின்றனர். பின்னர் மாலை 6.30 மணிக்கு கார் மூலம் திருச்சி செல்லும் கவர்னர் பன்வாரிலால் புரோகித், அங்கிருந்து விமானம் மூலம் சென்னை சென்றடைகிறார். இந்த புத்தக திருவிழாவில் “தினத்தந்தி“ பதிப்பு புத்தகங்கள் உள்பட பல்வேறு புத்தகங்கள் விற்பனை செய்யப்பட உள்ளது. நாளை மறுநாள் (சனிக்கிழமை) சாலமன் பாப்பையா குழுவினரின் பட்டி மன்றமும், வருகிற 23-ந் தேதி மோகன சுந்தரத்தின் சிறப்புரையும், 25-ந் தேதி சுகிசிவம் சொற்பொழிவும், 26-ந் தேதி லேனா தமிழ்வாணன், 28-ந் தேதி நந்தலாலா ஆகியோர் பேசுகின்றனர். இதற்கான ஏற்பாடுகளை தமிழக பண்பாட்டு பேரவை மற்றும் மாவட்ட நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர். அரியலூர் புத்தகத் திருவிழாவிற்கான முன்னேற்பாட்டு பணிகளையும், அங்கு அமைக்கப்பட்டுள்ள பல்வேறு அரங்குகளையும், பார்வையாளர்களின் அடிப்படை வசதிகளுக்கான பணிகளையும் அரியலூர் மாவட்ட கலெக்டர் டி.ஜி.வினய் நேற்று நேரில் ஆய்வு செய்தார்.

Next Story