கே.வி.குப்பம் அருகே 16 பேரிடம் ரூ.27 லட்சம் சீட்டுப்பணம் மோசடி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார்


கே.வி.குப்பம் அருகே 16 பேரிடம் ரூ.27 லட்சம் சீட்டுப்பணம் மோசடி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார்
x
தினத்தந்தி 18 July 2019 3:30 AM IST (Updated: 18 July 2019 1:09 AM IST)
t-max-icont-min-icon

கே.வி.குப்பம் அருகே 16 பேரிடம் ரூ.27 லட்சம் சீட்டுப்பணம் மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.

வேலூர், 

காட்பாடி தாலுகா கே.வி.குப்பம் அருகே உள்ள வேப்பனேரி கிராமத்தில் வசிக்கும் ஜெயராமன் மற்றும் அதேபகுதியை சேர்ந்த குமாரி, வெங்கடேசன், திலகா, வாசு உள்பட 16 பேர் நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

நாங்கள் அனைவரும் கூலி தொழில் செய்து வருகிறோம். கடந்த 2015-ம் ஆண்டு எங்கள் ஊரை சேர்ந்த கூட்டுறவு கடையில் வேலை செய்து வந்த ஒரு பெண் மாதாந்திர சீட்டுப்பணம் வசூலிப்பதாக கூறினார். அவருடைய வார்த்தையை நம்பி நாங்கள் மாதந்தோறும் ரூ.3 ஆயிரம் வீதம் பல சீட்டுகள் செலுத்தினோம். சீட்டுப்பணத்தை அந்த பெண் மற்றும் உறவினர்கள் 3 பேர் மாதந்தோறும் வீட்டுக்கு வந்து வசூலித்துச் செல்வர். இவ்வாறாக 16 பேரும் சுமார் ரூ.27 லட்சத்து 5 ஆயிரம் செலுத்தி உள்ளோம்.

சீட்டுகள் முடிவடைந்த நிலையில் நாங்கள் செலுத்திய பணத்தை கடந்த சில மாதங்களாக தராமல் மோசடி செய்து விட்டனர். இந்த நிலையில் சீட்டுப்பணம் வசூலித்த உறவினர்கள் 3 பேரில் ஒருவர் திடீரென இறந்து விட்டார். கூட்டுறவு கடையில் வேலை செய்யும் பெண் மற்றும் உறவினர்கள் 2 பேரிடமும் பணத்தை கேட்டால் தரமுடியாது என்று கூறுவதுடன், கொலை மிரட்டல் விடுக்கின்றனர்.

எனவே அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து, நாங்கள் கொடுத்த சீட்டுப்பணத்தை பெற்றுத்தர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மனுவை பெற்றுக்கொண்ட போலீசார் இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினர்.

Next Story