15 ஆயிரம் எக்டேர் பரப்பளவில் மானாவாரி சாகுபடி இயக்கம் கலெக்டர் தகவல்


15 ஆயிரம் எக்டேர் பரப்பளவில் மானாவாரி சாகுபடி இயக்கம் கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 18 July 2019 4:00 AM IST (Updated: 18 July 2019 1:09 AM IST)
t-max-icont-min-icon

15 ஆயிரம் எக்டேர் பரப்பளவில் மானாவாரி சாகுபடி இயக்கம் கலெக்டர் சாந்தா தகவல்.

பெரம்பலூர்,

தானியங்கள், பயிர் வகைகள், எண்ணெய் வித்துகள், பருத்தி பயிர்களுக்கு உற்பத்தியை அதிகரித்து விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும் நோக்கத்தில் நீடித்த நிலையான மானாவாரி இயக்கம் 2017-18-ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி 2019-20-ம் ஆண்டு இத்திட்டத்தில் மக்காச்சோளம் 10 ஆயிரத்து 950 எக்டேர் பரப்பளவிலும், பருத்தி 4 ஆயிரத்து 50 எக்டேர் பரப்பளவிலும் என பெரம்பலூர் வட்டாரத்தில் 3 தொகுப்புகளாகவும், ஆலத்தூர் வட்டாரத்தில் 4 தொகுப்புகளாகவும், வேப்பூர் வட்டாரத்தில் 4 தொகுப்புகளாகவும் மற்றும் வேப்பந்தட்டை வட்டாரத்தில் 4 தொகுப்புகளாகவும் என மொத்தம் 15 தொகுப்பு திட்டங்கள் 15 ஆயிரம் எக்டேரில் செயல்படுத்தப்படவுள்ளது. இதனை தொடர்ந்து பருத்தி மற்றும் மக்காச்சோளம் சாகுபடி செய்யும் தொகுப்பில் உள்ள விவசாயிகளுக்கு கோடை உழவிற்கு ரூ.ஆயிரத்து 250, பின்னேற்பு மானியமாக வழங்கப்படுகிறது. இதற்கான ஆவணங்களுடன் உதவி வேளாண்மை அலுவலர்களை அணுகி விண்ணப்பங்கள் பெற கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் விவசாயிகளின் வேளாண் உற்பத்தியை அதிகரிக்கும் பொருட்டு பருத்தி மற்றும் மக்காச்சோள பயிர்களுக்கு மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்ப சாகுபடி செயல் விளக்கம் மூலம் ரூ.2 ஆயிரத்து 500-க்கு இடுபொருட்கள் பின்னேற்பு மானியமாக வழங்கப்படுகிறது.

பெரம்பலூர் வட்டாரத்தில் செங்குணம், குரும்பலூர், லாடபுரம், ஆலத்தூர் வட்டாரத்தில் டி.களத்தூர், அழகிரிபாளையம், மேலமாத்தூர், கூத்தூர், வேப்பூர் வட்டாரத்தில் குன்னம், கீழப்புலியூர், பெருமத்தூர், துங்கபுரம், வேப்பந்தட்டை வட்டாரத்தில் தேவையூர், நூத்தப்பூர், வி.களத்தூர், வேப்பந்தட்டை ஆகிய கிராமங்களில் தொகுப்புகள் திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. எனவே தொகுப்பு திட்டத்தில் உள்ள விவசாயிகள் அனைவரும் பயனடையலாம். மேலும் விவரங்களுக்கு அருகாமையிலுள்ள வட்டார வேளாண்மை உதவி இயக்குனர்களை தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.

இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

Next Story