விழுப்புரத்தில் பரபரப்பு, திருநங்கை அடித்துக் கொலை - போலீசார் விசாரணை
விழுப்புரத்தில் திருநங்கை கல்லால் அடித்து படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த பயங்கர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
விழுப்புரம்,
விழுப்புரம் புறவழிச்சாலையில் இருந்து அயினம்பாளையம் கிராமத்துக்கு செல்லும் சாலையில் நேற்று காலை 35 வயது மதிக்கத்தக்க திருநங்கை ஒருவர் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். இதை பார்த்த அந்த வழியாக சென்ற பொதுமக்கள் இதுபற்றி விழுப்புரம் தாலுகா போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், துணை போலீஸ் சூப்பிரண்டு திருமால் ஆகியோர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்த திருநங்கையின் உடலை பார்வையிட்டனர். அப்போது அவரை யாரோ மர்மநபர்கள் கல்லால் அடித்துக்கொலை செய்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், கொலை செய்யப்பட்டு கிடந்த திருநங்கை கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கீரமங்கலத்தை சேர்ந்த அன்பு என்கிற அபிராமி(வயது 36) என்பதும், விழுப்புரம் அய்யங்கோவில் திட்டு பகுதியில் வசித்து வரும் திருநங்கைகளுடன் சேர்ந்து அவர் வசித்து வந்ததும், நேற்று முன்தினம் சக திருநங்கைகளுடன் பொதுமக்களிடம் பணம் வசூலிக்க வெளியே சென்ற அபிராமி நேற்று காலை கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்ததும் தெரியவந்தது. இதனால் அபிராமியுடன் பணம் வசூலிக்க சென்ற மற்ற திருநங்கைகள் 3 பேருக்கும் இந்த கொலை சம்பவத்தில் தொடர்பு இருக்கலாம் என்று போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. அதன்பேரில் அபிராமியுடன் சென்ற 3 திருநங்கைகளை போலீசார் பிடித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதற்கிடையே போலீசார், அபிராமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து பொதுமக்களிடம் வசூலித்த பணத்தை பங்கு பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் சக திருநங்கைகளே அபிராமியை கல்லால் அடித்துக் கொலை செய்தார்களா? அல்லது மர்ம நபர்கள் யாரேனும் அபிராமியை அடித்துக் கொலை செய்தார்களா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அபிராமி பிணமாக கிடந்த இடத்தின் அருகே உள்ள புறவழிச்சாலையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் திருநங்கையை கொலை செய்தவர்களின் உருவம் பதிவாகி உள்ளதா? என்றும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்த சம்பவம் விழுப்புரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story