மோட்டார் சைக்கிள் விபத்தில் கலெக்டரின் நேர்முக பெண் உதவியாளர் பலி கணவர் படுகாயம்


மோட்டார் சைக்கிள் விபத்தில் கலெக்டரின் நேர்முக பெண் உதவியாளர் பலி கணவர் படுகாயம்
x
தினத்தந்தி 18 July 2019 3:45 AM IST (Updated: 18 July 2019 1:24 AM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டையில் மோட்டார் சைக்கிள் மோதி கலெக்டரின் நேர்முக பெண் உதவியாளர் பலியானார். கணவர் படுகாயமடைந்தார்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை தைலா நகர் பகுதியை சேர்ந்தவர் திருஞானம். இவரது மனைவி பாலசந்திரா (வயது 57). இவர் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கணக்கியல் துறையின் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பாலசந்திராவும், அவரது கணவர் திருஞானமும் மோட்டார் சைக்கிளில் தெற்கு 4-ம் வீதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றனர். பின்னர் மருத்துவமனையில் டாக்டரை பார்த்துவிட்டு கணவன்-மனைவி இருவரும் வீட்டிற்கு திரும்பி வருந்து கொண்டிருந்தனர். அப்போது தெற்கு 4-ம் வீதி அருகில் வந்துகொண்டிருந்தபோது திருஞானம் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் பின்னால், புதுக்கோட்டை போஸ் நகரை சேர்ந்த கார்த்திக் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் கீழே விழுந்த திருஞானம், பாலசந்திரா ஆகியோர் படுகாயமடைந்தனர்.

இதைப்பார்த்த அருகில் இருந்தவர்கள் படுகாயமடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பாலசந்திரா நேற்று காலை பரிதாபமாக இறந்தார். திருஞானம் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து புதுக்கோட்டை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் விபத்தில் இறந்த சம்பவம் கலெக்டர் அலுவலர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story