கூடலூர்-முதுமலை எல்லையோரத்தில், அகழியை ஆழப்படுத்தும் பணி மும்முரம்
கூடலூர்-முதுமலை எல்லையோரத்தில் அகழியை ஆழப்படுத்தும் பணி தொடங்கி, மும்முரமாக நடைபெற்று வருகிறது.
கூடலூர்,
கூடலூர் நகராட்சியும், முதுமலை புலிகள் காப்பகமும் இணையும் எல்லையோர கிராமங்களுக்குள் காட்டுயானைகள் நுழைந்து விவசாய பயிர்களை தின்று சேதப்படுத்துகின்றன. மேலும் பொதுமக்களை தாக்கும் சம்பவங்களும் நடக்கிறது. கடந்த 6-ந் தேதி காலையில் பால் ஏற்றி சென்ற ஜீப்பை ஊருக்குள் வந்த காட்டுயானை ஒன்று சாலையோரம் கவிழ்த்தது. இதனால் காட்டுயானைகள் வருகையை தடுக்க வேண்டும் என்று தொரப்பள்ளி, குனில், புத்தூர்வயல் உள்பட பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கூடலூர்-மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் 2 மணி நேரம் மறியலில் ஈடுபட்டனர்.
பின்னர் வருவாய், வனம் மற்றும் காவல் துறையினர் விரைந்து வந்து காட்டுயானைகள் நுழைவதை தடுக்க கூடலூர்- முதுமலை எல்லையோரத்தில் உள்ள அகழியை ஆழப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், குனில் முதல் போஸ்பாரா வரை 10 கிலோ மீட்டர் தூரம் அகழி புதியதாக தோண்டப்படும் எனறும், அதுவரை காட்டுயானைகள் நுழையாமல் இருக்க கும்கிகளை கொண்டு கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்படும் என்றும் உறுதி அளிக்கப்பட்டது. இதை பொதுமக்கள் ஏற்று கொண்டு சாலை மறியலை கைவிட்டனர்.
இந்த நிலையில் உறுதி அளித்தவாறு கூடலூர்-முதுமலை எல்லையோரத்தில் கும்கி யானைகளை கொண்டு வனத்துறையினர் இரவு-பகலாக கண்காணிப்பு பணி மேற்கொண்டு வருகின்றனர். தினமும் இரவில் காட்டுயானைகள் வனத்தில் இருந்து வெளியேறி தொரப்பள்ளி, குனில் பகுதியில் நுழைய முயன்று வருகிறது. இதனை பட்டாசுகள் வெடித்தும், கும்கி யானைகள் உதவியுடனும் வனத்துறையினர் விரட்டியடித்து வருகின்றனர்.
இதேபோல் எல்லையோர கிராமங்களில் முகாமிட்டுள்ள வனத்துறையினர் மாலை அல்லது இரவில் காய்ந்த மரத்துண்டுகளை கொண்டு தீ மூட்டி வருகின்றனர். இதனால் காட்டுயானைகள் வருகை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல் எல்லையோர பகுதியில் மண் மூடி கிடந்த அகழியை பொக்லைன் எந்திரம் கொண்டு ஆழப்படுத்தும் பணி நேற்று தொடங்கி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, ஏற்கனவே தோண்டி மண் நிறைந்த அகழியை ஆழப்படுத்தும் பணி நடக்கிறது. முக்கியமாக காட்டுயானைகள் அதிகளவு நுழையும் பாதைகள் கண்டறியப்பட்டு உள்ளது. அந்த இடங்களில் அகழிகள் தோண்டப்படும் என்றனர்.
Related Tags :
Next Story