அகழாய்வு பணிக்காக கீழடியில் மேலும் குழிகள் தோண்ட அதிகாரிகள் முடிவு


அகழாய்வு பணிக்காக கீழடியில் மேலும் குழிகள் தோண்ட அதிகாரிகள் முடிவு
x
தினத்தந்தி 18 July 2019 4:30 AM IST (Updated: 18 July 2019 2:01 AM IST)
t-max-icont-min-icon

திருப்புவனம் அருகே கீழடியில் நடைபெற்று வரும் 5-ம் கட்ட அகழாய்வு பணிகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், மேலும் குழிகள் தோண்ட அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

திருப்புவனம்,

திருப்புவனம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கீழடியில் மத்திய-மாநில அரசுகளின் சார்பில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் தொல்லியல் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் கடந்த 2015, 2016, 2017 ஆகிய 3 ஆண்டுகள் மத்திய அரசின் சார்பில் தொல்லியல் அகழ்வராய்ச்சி நடைபெற்று மொத்தம் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த 2018-ம் ஆண்டு முதல் தமிழக தொல்லியல் துறை சார்பில் 4-ம் கட்ட அகழ்வாராய்ச்சி நடத்தப்பட்டு அதில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்தநிலையில் தற்போது 5-ம் கட்ட அகழ்வராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக விவசாயிகள் கருப்பையா, முருகேசன் ஆகியோரது நிலங்களில் குழிதோண்டி ஆராய்ச்சி பணிகள் நடக்கிறது. இதில் கருப்பையா நிலத்தில் 4 குழிகள் தோண்டப்பட்டது. இதில் சிறிய மண் பானை, ஓடுகள், வட்ட வடிவிலான பெரிய பானை கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பின்னர் முருகேசன் நிலத்தில் ஆய்வு பணி மேற்கொண்ட போது இரட்டை சுவரும் மற்றும் அதன் தொடர்ச்சியும் கண்டுப்பிடிக்கப்பட்டது.

கூடுதலாக மாரியம்மாள் என்பவரது நிலத்திலும் 3 குழிகள் தோண்டப்பட்டு ஆய்வு நடத்தப்பட்டது. மேலும் இந்த பகுதியில் ஜி.பி.ஆர். என்ற தரை ஊடுருவும் கருவி மூலம் ஆய்வு நடைபெற்றது. இந்த ஆய்வின் போது பூமிக்கடியில் 25 அடி ஆழத்தில் உள்ள பொருட்கள் தெளிவாக தெரியவரும் என்று தொல்லியல் துறையினர் தெரிவித்தனர். அதன் பின்னர் போதகுரு என்பவரது நிலத்திலும் குழிகள் தோண்டி ஆய்வு செய்யும் போது பலவிதமான மண்பாண்ட ஓடுகள் அதிக அளவில் கிடைத்துள்ளது. தற்போது மாரியம்மாள் நிலத்தில் மேலும் 3 குழிகள் தோண்டப்பட்டு ஆய்வு செய்ததில் சிறிய பொருட்கள் கிடைத்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்கிடையே விவசாயி கருப்பையா நிலத்தில் மேலும் குழிகள் தோண்டி ஆய்வு செய்ய முடிவு செய்து, தற்போது நிலம் சுத்தம் செய்யப்பட்டு வருகிறது. இங்கு குழிகள் தோண்டி ஆய்வு செய்யும் போது மேலும் பல்வேறு பொருட்கள் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதாக அதிகாரிகள் கூறினர்.

Next Story