சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு: சபாநாயகருடன் காங்கிரஸ் தலைவர்கள் சந்திப்பு சில சந்தேகங்களுக்கு விளக்கம் பெற்றனர்
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் சட்டசபை சபாநாயகரை காங்கிரஸ் தலைவர்கள் நேற்று நேரில் சந்தித்து பேசினர். சில சந்தேகங்கள் குறித்து விளக்கம் பெற்றனர்.
பெங்களூரு,
கர்நாடகத்தில் முதல்-மந்திரி குமாரசாமி தலைமையில் காங்கிரஸ்-ஜனதா தளம் (எஸ்) கூட்டணி அரசு நடக்கிறது. இந்த கூட்டணி கட்சிகளை சேர்ந்த 16 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்துள்ளனர். அவர்களின் ராஜினாமா குறித்து முடிவு எடுக்க சபாநாயகருக்கு சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை விதித்திருந்தது. அந்த தடையை சுப்ரீம் கோர்ட்டு நேற்று நீக்கியது.
அதே நேரத்தில் ராஜினாமா செய்துள்ள எம்.எல்.ஏ.க்களை சட்டசபை கூட்டத்தில் கலந்துகொள்ளும்படி கட்டாயப்படுத்தக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவு, அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு கிடைத்த வெற்றியாகவே பார்க்கப்படுகிறது.
அனுமதி பெற வேண்டும்
இந்த நிலையில் சபாநாயகர் ரமேஷ்குமாரை பெங்களூரு விதான சவுதாவில் உள்ள அவரது அலுவலகத்தில் முதல்- மந்திரி குமாரசாமி, சட்டசபை காங்கிரஸ் கட்சி தலைவர் சித்தராமையா, மந்திரிகள் கே.ஜே.ஜார்ஜ், கிருஷ்ண பைரே கவுடா ஆகியோர் நேற்று நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினர். சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்துள்ள உத்தரவு குறித்து காங்கிரஸ் தலைவர்கள் சில விளக்கங்களை சபாநாயகரிடம் கேட்டனர்.
இந்த சந்திப்புக்கு பிறகு மந்திரி கிருஷ்ண பைரேகவுடா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
சுப்ரீம் கோர்ட்டு இன்று (அதாவது நேற்று) தீர்ப்பு கூறியுள்ளது. ராஜினாமா செய்துள்ள 15 எம்.எல்.ஏ.க்களை சட்டசபை கூட்டத்தில் கலந்துகொள்ளும்படி கட்டாயப்படுத்தக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து சபாநாயகரிடம் நாங்கள் சில விளக்கங்களை கேட்டோம். பொதுவாக சட்டசபை கூட்டத்தில் பங்கேற்காவிட்டால் அதுகுறித்து முன்கூட்டியே சபாநாயகரிடம் அனுமதி பெற வேண்டும் என்று விதிமுறைகள் உள்ளது.
கொறடா உத்தரவு
இதற்கு பதிலளித்த சபாநாயகர், விதிமுறைகளின்படி கூட்டத்திற்கு வர முடியாவிட்டால் கட்டாயம் முன்அனுமதி பெற வேண்டும் என்று கூறினார். கொறடா உத்தரவு பிறப்பிப்பது என்பது சட்டசபை கட்சிகளின் அடிப்படை உரிமை. ஆனால் இந்த உரிமையை, சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவு பறிப்பதாக உள்ளது. இதுகுறித்து சபாநாயகரிடம் விவரம் கேட்டோம்.
அதற்கு, கொறடா உத்தரவு பிறப்பிப்பது உங்களுக்கு சம்பந்தப்பட்ட விஷயம். நீங்கள் கொறடா உத்தரவை பிறப்பித்து, அதை யாராவது மீறினால் அதுபற்றி புகார் அளிக்கலாம். அதன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இதுபற்றி நான் அதிகம் கூற முடியாது. சட்ட ஆலோசனை பெறுங்கள் என்று சபாநாயகர் கூறினார்.
இவ்வாறு மந்திரி கிருஷ்ண பைரேகவுடா கூறினார்.
Related Tags :
Next Story