அரசியல் சாசனத்தின் படி செயல்படுவேன் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு எனது பொறுப்பை அதிகரித்துள்ளது சபாநாயகர் ரமேஷ்குமார் பேட்டி


அரசியல் சாசனத்தின் படி செயல்படுவேன் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு எனது பொறுப்பை அதிகரித்துள்ளது சபாநாயகர் ரமேஷ்குமார் பேட்டி
x
தினத்தந்தி 18 July 2019 4:30 AM IST (Updated: 18 July 2019 2:56 AM IST)
t-max-icont-min-icon

சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு எனது பொறுப்பை அதிகரித்துள்ளது என்றும், அரசியல் சாசனத்தின் படி செயல்படுவேன் என்றும் சபாநாயகர் ரமேஷ்குமார் கூறினார்.

பெங்களூரு,

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு குறித்து கர்நாடக சட்டசபை சபாநாயகர் ரமேஷ்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

காலக்கெடு விதிக்கவில்லை

அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா மற்றும் தகுதி நீக்கம் பற்றி முடிவு எடுக்க காலக்கெடு எதையும் சுப்ரீம் கோர்ட்டு விதிக்கவில்லை. இதன் மூலம் எனது பணி மீதான பொறுப்பு அதிகரித்துள்ளது. சுப்ரீம் கோர்ட்டு காலக்கெடு விதிக்கவில்லை என்பதற்காக, இஷ்டம் போல் காலத்தை தாழ்த்தும் நோக்கம் எனக்கு இல்லை.

சுப்ரீம் கோர்ட்டு என் மீது வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்றிக் கொண்டு, அரசியல் சாசனத்தின் படி செயல்படுவேன். ராஜினாமா கடிதங்களை ஏற்பது மற்றும் தகுதி நீக்கம் செய்வது குறித்து சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு முடிவு எடுப்பேன். அரசியல் சாசனத்திற்கு எதிராக செயல்படமாட்டேன்.

கட்டாயப்படுத்த கூடாது

சட்டசபை கூட்டத்தில் பங்கேற்கும்படி எம்.எல்.ஏ.க்களை கட்டாயப்படுத்தக் கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. இது எனது தொடர்புடைய விஷயம் அல்ல. இது கட்சிகளுக்கு சேர்ந்த விஷயம். இதில் நான் தலையிட மாட்டேன். சட்டசபை கூட்டம் நடைபெறும் தேதி, நேரம் மற்றும் உறுப்பினர்களுக்கு விவாதிக்கப்படும் பொருள் பற்றி தகவல் தெரிவிப்பேன்.

உறுப்பினர்களின் வருகை குறித்து பதிவு செய்வேன். இது எனது வேலை. ஏற்கனவே முடிவு செய்த படி கர்நாடக சட்டசபையில் நாளை (அதாவது இன்று) காலை 11 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானம் மீதான விவாதம் தொடங்குகிறது. யார் எவ்வளவு நேரம் பேசுகிறார்கள் என்பதன் அடிப்படையில் வாக்கெடுப்பு நேரம் முடிவு செய்யப்படும்.

எனது பணி நடுவர் போன்றது

இதற்கு முன்பு மொரார்ஜி தேசாய் பிரதமராக இருந்தபோது, அவரது அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது அரை மணி நேரத்தில் முடிவு அறிவிக்கப்பட்டது. உறுப்பினர்கள் பேசினால், நேரம் எடுத்துக்கொள்ளும். உறுப்பினர்கள் யாரும் பேச விரும்பவில்லை என்றால், உடனே நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும். இங்கு எனது பணி ‘அம்பயர்‘ (நடுவர்) போன்றது. ‘நோ பால்‘ போட்டால், ‘நோ பால்‘ என்று கூறுவேன். எல்.பி.டபுள்யு ஆனால், எல்.பி.டபுள்யு என்பேன்.

நாளை (இன்று) என்ன நடக்கும் என்பதை இப்போதே என்னால் சொல்ல முடியாது. எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா குறித்து நான் எடுக்கும் முடிவு சட்டப்படி இருக்கும். நான் எடுக்கும் முடிவு யாருக்கு பலன் கிடைக்கிறதோ அல்லது பாதிப்பு ஏற்படுகிறதோ என்ற விஷயம் எனக்கு தொடர்புடையது அல்ல. சிலரின் அரசியல் விருப்பங்களுக்கு நான் பொறுப்பல்ல.

இவ்வாறு ரமேஷ்குமார் கூறினார்.

Next Story