சட்டசபை தேர்தலில் சரி பாதி தொகுதிகள் வேண்டும் காங்கிரசிடம், தேசியவாத காங்கிரஸ் வலியுறுத்தல்


சட்டசபை தேர்தலில் சரி பாதி தொகுதிகள் வேண்டும் காங்கிரசிடம், தேசியவாத காங்கிரஸ் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 18 July 2019 4:30 AM IST (Updated: 18 July 2019 3:35 AM IST)
t-max-icont-min-icon

வருகிற சட்டசபை தேர்தலில் தங்களுக்கு சரி பாதி தொகுதிகளை ஒதுக்கவேண்டும் என காங்கிரசிடம், தேசியவாத காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி உள்ளது.

மும்பை, 

மராட்டியத்தில் காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கடந்த 1999-ம் ஆண்டு முதல் சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களில் கூட்டணி அமைத்து போட்டியிட்டு வருகிறது.

ஆனால் கடந்த 2014-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் இந்த கூட்டணியில் முறிவு ஏற்பட்டு, இரு கட்சிகளும் தனித்தனியாக போட்டியிட்டன. இந்த தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெற்று சிவசேனா உதவியுடன் ஆட்சியை கைப்பற்றியது. இதனால் 15 ஆண்டு காலம் நடந்து வந்த காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி, பா.ஜனதா- சிவசேனாவிடம் பறிபோனது.

செயற்குழு கூட்டம்

இந்த நிலையில் வருகிற அக்டோபர் மாத வாக்கில் மராட்டிய சட்டமன்றத்துக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இதில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி வைத்து போட்டியிட முடிவு செய்து தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையை நடத்தி வருகின்றன.

இதற்கு மத்தியில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் நேற்று முன்தினம் டெல்லியில் நடந்தது. இதில் கடந்த நாடாளுமன்ற தேர்தல் தோல்வி குறித்தும், நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

சரிபாதி தொகுதிகள்

மேலும் மராட்டிய சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தங்களுக்கு சரிபாதி தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்றும் செயற்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இதற்கான காரணங்களையும் தேசியவாத காங்கிரஸ், காங்கிரசிடம் முன்வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

குறிப்பாக, கடந்த 2014-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் 26 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி 2 இடத்திலும், 21 தொகுதியில் போட்டியிட்ட தேசியவாத காங்கிரஸ் 4 இடங்களிலும் வெற்றி வெற்றன.

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஒரு இடத்திலும், தேசியவாத காங்கிரஸ் கட்சி 4 இடங்களிலும் வெற்றி பெற்றன.

காங்கிரசை விட சிறப்பான செயல்பாடு

2004-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் காங்கிரசை விட தேசியவாத காங்கிரசே அதிக இடங்களில் வெற்றி பெற்றது. ஆனால் முதல்-மந்திரி பதவி குறைந்த இடங்களில் வெற்றி பெற்ற காங்கிரசுக்கு தான் வழங்கப்பட்டது.

இதுவரை நடந்த தேர்தல்களில் காங்கிரசை விட குறைந்த தொகுதிகளில் போட்டியிட்டு வந்தாலும், தேர்தலில் தங்களது கட்சி சிறப்பாக செயல்பட்டு உள்ளதாக தேசியவாத காங்கிரஸ் கூறுகிறது.

இதுகுறித்து தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், “தற்போதைய அரசியல் நிலவரம் மாறி உள்ளது. கடந்த 2 நாடாளுமன்ற தேர்தல்களிலும் காங்கிரசை விட நாங்கள் அதிக இடங்களில் வெற்றி பெற்று உள்ளோம். எனவே சட்டசபை தேர்தலில் இரு கட்சிகளும் சரிபாதி தொகுதிகளை பகிர்ந்து கொள்ள வேண்டும்” என்றார்.

மராட்டிய சட்டசபைக்கு 288 தொகுதிகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Next Story