தூக்கணாம்பாக்கம் அருகே, வீடு புகுந்து 3 பவுன் நகை திருட்டு - தப்பி ஓடிய வாலிபரை பொதுமக்கள் மடக்கி பிடித்தனர்


தூக்கணாம்பாக்கம் அருகே, வீடு புகுந்து 3 பவுன் நகை திருட்டு - தப்பி ஓடிய வாலிபரை பொதுமக்கள் மடக்கி பிடித்தனர்
x
தினத்தந்தி 18 July 2019 3:30 AM IST (Updated: 18 July 2019 5:02 AM IST)
t-max-icont-min-icon

தூக்கணாம்பாக்கம் அருகே வீடு புகுந்து 3 பவுன் நகையை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

நெல்லிக்குப்பம், 

தூக்கணாம்பாக்கம் அருகே உள்ள பள்ளிப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 43). இவர் ஒரு மளிகைகடையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி எழிலரசி. சம்பவத்தன்று நாகராஜ் வழக்கம் போல் மளிகை கடைக்கு வேலைக்கு சென்று விட்டார். இந்த நிலையில் எழிலரசி, வீட்டை பூட்டிவிட்டு பள்ளியில் படிக்கும் தனது குழந்தைகளுக்கு மதிய உணவை எடுத்து சென்றார்.

சிறிது நேரத்தில், மதிய உணவு சாப்பிடுவதற்காக நாகராஜ் வீட்டிற்கு வந்த போது முன்பக்க கதவு திறந்து இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது வாலிபர் ஒருவர் பீரோவில் இருந்த 3 பவுன் நகையை திருடி கொண்டு வெளியில் தப்பி ஓட முயற்சித்தார்.

உடனே நாகராஜ் கூச்சல் எழுப்பினார். இந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடோடி வந்து வாலிபரை மடக்கி பிடித்து தூக்கணாம்பாக்கம் போலீஸ்நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் புதுச்சேரி மாநிலம் பூர்ணாங்குப்பத்தை சேர்ந்த வேல்முருகன்(வயது 34) என்பது தெரியவந்தது. நகையை திருடியதை ஒப்புக்கொண்டதையடுத்து வேல்முருகனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 3 பவுன் நகையையும் பறிமுதல் செய்தனர்.

Next Story