சாணார்பட்டி அருகே, துப்பாக்கியால் சுடப்பட்ட வாலிபர் - தீவிர சிகிச்சை, பரபரப்பு தகவல்
சாணார்பட்டி அருகே துப்பாக்கியால் வாலிபர் சுடப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கோபால்பட்டி,
திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தை அடுத்த சாணார்பட்டி அருகே உள்ள தவசிமடை பகுதியை சேர்ந்தவர் பிச்சமுத்து. அவருடைய மகன் சுந்தரமூர்த்தி (வயது 21). கூலித்தொழிலாளி. இவர் நேற்று மாலையில் தனது வயலில் நீர்ப்பாய்ச்சும் வேலையில் ஈடுபட்டு இருந்தார்.
அப்போது, திடீரென துப்பாக்கி சுடப்படும் சத்தம் கேட்டது. உடனே சுந்தரமூர்த்தி அலறல் சத்தத்துடன் கீழே விழுந்தார். உடனே அந்த பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் பதறியபடி ஓடிவந்து பார்த்தனர். வயிற்றில் துப்பாக்கி குண்டு துளைத்த காயத்துடன், ரத்தவெள்ளத்தில் சுந்தரமூர்த்தி கிடந்தார். தன்னை யாரோ துப்பாக்கியால் சுட்டுவிட்டதாக கூறி இருக்கிறார்.
உடனே அங்கிருந்தவர்கள் சுற்றுமுற்றும் தேடிப்பார்த்தனர். பின்னர் சுந்தரமூர்த்தியை உடனடியாக ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றுள்ளனர். பின்னர் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் அவர் சேர்க்கப்பட்டார். ஆனால், பலத்த காயம் ஏற்பட்டு இருந்ததால், உடனடியாக அவரை உயர் சிகிச்சைக்காக மதுரை பெரிய ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லுமாறு டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
இதை தொடர்ந்து நேற்று இரவு 10.30 மணி அளவில் ஆம்புலன்சில் சுந்தரமூர்த்தி மதுரை பெரிய ஆஸ்பத்திரிக்கு அழைத்து வரப்பட்டு அனுமதிக்கப்பட்டார். அங்கு அவசர சிகிச்சை பிரிவில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுதொடர்பான தகவலின் பேரில் போலீசார் விரைந்து வந்து சுந்தரமூர்த்தியிடம் விசாரித்தனர். அப்போது, யாரோ மறைந்து நின்று தன்னை துப்பாக்கியால் சுட்டுவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக டாக்டர்கள் கூறும் போது, நாட்டு துப்பாக்கியில் இருந்து பாய்ந்த தோட்டா, சுந்தரமூர்த்தியின் வயிற்றை துளைத்தது தெரியவந்துள்ளது. இதே போல் அவரது வலது கை மற்றும் கால்களிலும் காயம் உள்ளது. அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டதால் அவரது உடல்நிலை சற்று மோசமான நிலையில் இருக்கிறது. தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வருகிறோம்” என்றனர்.
இதுதொடர்பாக போலீசார் கூறுகையில், “சுந்தரமூர்த்தியிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில் அவர் முன்னுக்குப்பின் முரணாக தகவல்களை கூறியுள்ளார். எங்கிருந்தோ அவருக்கு கிடைத்த நாட்டுத்துப்பாக்கியை பயன்படுத்த தெரியாமல், தோட்டாவை நிரப்பி உள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக துப்பாக்கி வெடித்து, அவரது வயிற்றில் தோட்டா பாய்ந்திருக்கலாம் என சந்தேகிக்கிறோம். அவர் தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் இருப்பதால், அடுத்தகட்ட விசாரணைக்கு பின்னர் இதுகுறித்த முழுமையான தகவல் தெரியவரும். ஒருவேளை அவர் துப்பாக்கியால் சுடப்பட்டு இருந்தால், அவரை சுட்ட நபர் யார், அதற்கான காரணம் என்ன? என்பது குறித்தும் தீவிர விசாரணை நடத்துவோம்” என்றனர்.
இது சம்பந்தமாக நேற்று இரவில் மதுரை ஆஸ்பத்திரிக்கு கியூ பிரிவு போலீசாரும் வந்து விசாரணை நடத்தினார்கள்.
Related Tags :
Next Story