லஞ்சம் வாங்கிய சர்வேயருக்கு 3 ஆண்டு சிறை திருவண்ணாமலை கோர்ட்டு தீர்ப்பு
பட்டா மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய சர்வேயருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருவண்ணாமலை கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை அருகே உள்ள காரியந்தல் கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 50), ஓய்வு பெற்ற ராணுவ வீரர். இவரது தந்தை குடும்ப சொத்தை மகன்களுக்கு பிரித்து வழங்கி உள்ளார். இதையடுத்து லட்சுமணன் மற்றும் அவரது அண்ணன் சவுந்தரராஜன் ஆகியோருக்கு சொந்தமான 3½ ஏக்கர் நிலத்தை உட்பிரிவு செய்து பட்டா மாற்றம் செய்து தரக்கோரி திருவண்ணாமலை தாலுகா அலுவலக வளாகத்தில் உள்ள சர்வேயர் அலுவலகத்தில் மனு அளித்து உள்ளார்.
இந்த மனுவை நாயுடுமங்கலம் குறுவட்ட சர்வேயர் சக்திவேல் (56) விசாரித்து உள்ளார். இதையடுத்து சக்திவேல் பட்டா மாற்றம் செய்ய லட்சுமணன், அவரது அண்ணன் சவுந்திரராஜன் ஆகியோரிடம் தலா ரூ.3 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்.
இதுகுறித்து லட்சுமணன் திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். இதையடுத்து சர்வேயர் சக்திவேலை போலீசார் லஞ்சம் வாங்கும் போது கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை திருவண்ணாமலை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. அதில் லஞ்சம் வாங்கிய சர்வேயர் சக்திவேலுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி சங்கர் உத்தரவிட்டார்.
இதையடுத்து சர்வேயர் சக்திவேலை, போலீசார் வேலூர் மத்திய சிறைக்கு அழைத்து சென்றனர்.
Related Tags :
Next Story