மத்தூர் அருகே அரசு பஸ் மோதி பெண் பலி உறவினர்கள் சாலை மறியல்


மத்தூர் அருகே அரசு பஸ் மோதி பெண் பலி உறவினர்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 19 July 2019 4:30 AM IST (Updated: 18 July 2019 10:22 PM IST)
t-max-icont-min-icon

மத்தூர் அருகே அரசு பஸ் மோதி பெண் பலியானார். இதனால் அவரது உறவினர்கள் அங்கு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மத்தூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் வரட்டனப்பள்ளியைச் சேர்ந்தவர் நாகிசெட்டி. ஜவுளி வியாபாரி. இவரது மனைவி சுமித்ரா (வயது 55). இவர்கள் 2 பேரும் நேற்று காலை போச்சம்பள்ளி அருகே உள்ள அத்திகானூரில் உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சியில் பங்கேற்க மோட்டார்சைக்கிளில் சென்றனர்.

அவர்கள் கண்ணண்டஅள்ளி கூட்டு ரோடு பக்கமாக சென்ற போது எதிரே திருவண்ணாமலையில் இருந்து பெங்களூரு நோக்கி சென்ற அரசு பஸ் அவர்கள் சென்ற மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர். அதில் சுமித்ரா சம்பவ இடத்திலேயே பலியானார். நாகிசெட்டிக்கு தலை மற்றும் உடலில் பலத்த காயங்கள் ஏற்பட்டன.

அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே விபத்து குறித்து தகவல் அறிந்ததும் சுமித்ராவின் உறவினர்கள் கண்ணண்ட அள்ளி கூட்டு ரோடு அருகில் திரண்டனர். அவர்கள் அங்கு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இது குறித்து அவர்கள் கூறுகையில், இந்த பகுதியில் அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன. ஆண்டுக்கு 5-க்கும் மேற்பட்டவர்கள் இங்கு விபத்தில் இறக்கிறார்கள். இந்த பகுதியில் தனியார் பள்ளி சார்பில் வைக்கப்பட்டிருந்த தடுப்பு கம்பிகள் அகற்றப்பட்டதால் விபத்து நடந்தது. இங்கு உடனடியாக வேகத்தடை அமைக்க வேண்டும் என்றனர்.

இது குறித்து தகவல் அறிந்ததும் வட்டார வளர்ச்சி அலுவலர் தமிழ்செல்வன் மற்றும் மத்தூர் போலீசார் அங்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். அவர்களிடம் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர். இதைத் தொடர்ந்து சுமித்ராவின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த மறியலால் கிருஷ்ணகிரி - மத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story