மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து சேலத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து சேலத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 19 July 2019 3:45 AM IST (Updated: 18 July 2019 10:47 PM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது, சிலர் கொசு வலைக்குள் அமர்ந்து நூதன முறையில் எதிர்ப்பு தெரிவித்தனர்.

சேலம், 

சேலம் மாநகராட்சி பகுதியில் சுகாதார பணிகள் சரிவர மேற்கொள்ளாமல் இருப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாகவும், கொசு தொல்லையால் பொதுமக்கள் அவதிபட்டு வருவதாகவும் கூறி இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு அம்மாபேட்டை மண்டல செயலாளர் ஷாநவாஸ்கான் தலைமை தாங்கினார். இதில் நிர்வாகிகள் கந்தன், ராஜமாணிக்கம், செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் மாவட்ட செயலாளர் மோகன், மாவட்ட பொதுச்செயலாளர் விமலன், பொருளாளர் ராமன் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தியும், மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும் பேசினர். இதையடுத்து மாநகராட்சி பகுதிகளில் கொசு தொல்லையால் மக்கள் அவதிப்படுவதாகவும், கழிவுநீர் கால்வாய்களை தூர்வாராமல் இருப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதை விளக்கும் வகையில் சிலர் கொசு வலைக்குள் அமர்ந்து தங்களது எதிர்ப்புகளை தெரிவித்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட பொதுச்செயலாளர் விமலன் நிருபர்களிடம் கூறுகையில், சேலம் மாநகரில் சாக்கடை கழிவுநீர் கால்வாய்கள் சுத்தம் செய்யப்படுவது இல்லை. இதனால் கழிவுநீர் தேங்கி கொசுக்கள் அதிகளவில் உற்பத்தி ஆவதால் பல்வேறு நோய்கள் ஏற்படுகிறது. கொசு தொல்லையால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையிலும் இரவில் தூங்க முடியாமல் அவதிப்பட்டு வருகிறார்கள். மேலும், தெரு நாய்களின் தொல்லையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குப்பை கழிவுகளை சரிவர அப்புறப்படுத்தாமல் இருப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே மாநகராட்சி பகுதியில் நிலவும் அடிப்படை பிரச்சினைகளை தீர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

Next Story