பேரூராட்சி கவுன்சிலர் உள்பட 2 பேர் கொலை வழக்கு: தந்தை-மகனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை நாமக்கல் கோர்ட்டு தீர்ப்பு
நாமகிரிப்பேட்டை அருகே பேரூராட்சி கவுன்சிலர் உள்பட 2 பேர் கொலை வழக்கில் தந்தை-மகனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து நாமக்கல் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
நாமக்கல்,
நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை அருகே உள்ள ஆர்.புதுப்பட்டியை சேர்ந்தவர் அய்யாவு என்கிற பெரியண்ணன் (வயது 65). விவசாயி. இவரது மகன் சிவக்குமார் (35). இவர் ஆர்.புதுப்பட்டி பேரூராட்சியில் 8-வது வார்டு கவுன்சிலராக இருந்து வந்தார்.
இவர்களது பக்கத்து தோட்டத்தை சேர்ந்தவர் மாரப்பன் (63). அவரது மகன் சிவக்குமார் (31). இவர்களுக்கு இடையே நீண்டகாலமாக வழித்தட பிரச்சினை இருந்து வந்தது. இது தொடர்பாக கோர்ட்டில் வழக்கும் தொடுத்து இருந்தனர். இந்த வழக்கில் அய்யாவு என்கிற பெரியண்ணன் தரப்புக்கு சாதகமாக தீர்ப்பு வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த மாரப்பன், அவரது மகன் சிவக்குமார் ஆகியோர் கடந்த 2016-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 3-ந் தேதி வீட்டின் முன்பு தூங்கிக் கொண்டு இருந்த அய்யாவு என்கிற பெரியண்ணன், அவரது மகன் சிவக்குமார் ஆகிய இருவரையும் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கினர்.
இதில் படுகாயம் அடைந்த இருவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் போகும் வழியிலேயே அய்யாவு என்கிற பெரியண்ணன் இறந்து விட்டார். அவரது மகன் சிவக்குமாரும் அங்கு சிகிச்சை பலன்இன்றி இறந்தார். இந்த இரட்டை கொலை சம்பவம் தொடர்பாக நாமகிரிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மாரப்பன், அவரது மகன் சிவக்குமார் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
பின்னர் அவர்கள் மீது நாமக்கல் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் சிவக்குமார் வாதாடினார். இவ்வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதில் குற்றம் சாட்டப்பட்ட மாரப்பன், அவரது மகன் சிவக்குமார் ஆகிய இருவருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தனசேகரன் உத்தரவிட்டார். இதேபோல் இருவருக்கும் தலா ரூ.6 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. இதையடுத்து சிறை தண்டனை விதிக்கப்பட்ட மாரப்பன், அவரது மகன் சிவக்குமார் ஆகிய இருவரையும் போலீசார் கோவை சிறைக்கு அழைத்து சென்றனர்.
Related Tags :
Next Story