நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: நாமக்கல் கோர்ட்டில் யுவராஜ் உள்பட 11 பேர் ஆஜர்


நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: நாமக்கல் கோர்ட்டில் யுவராஜ் உள்பட 11 பேர் ஆஜர்
x
தினத்தந்தி 19 July 2019 4:15 AM IST (Updated: 18 July 2019 11:11 PM IST)
t-max-icont-min-icon

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் யுவராஜ் உள்பட 11 பேர் நேற்று நாமக்கல் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

நாமக்கல், 

சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்தவர் என்ஜினீயர் கோகுல்ராஜ் (வயது 23). இவர் கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் மாதம் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக நாமக்கல் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீரன்சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் உள்ளிட்ட 17 பேரை கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணைக்காக கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 19-ந் தேதி யுவராஜை போலீசார் நாமக்கல் மாவட்ட முதன்மை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அப்போது கோர்ட்டில் நீதிபதி இளவழகனுக்கு எதிராக ஆவேசமாக பேசியதாக யுவராஜ் மீது கோர்ட்டு தரப்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இதேபோல் யுவராஜ், அவரது சகோதரர் தங்கதுரை, டிரைவர் அருண் உள்பட 11 பேர் மீது மற்றொரு கோர்ட்டு அவமதிப்பு வழக்கும் நிலுவையில் இருந்து வருகிறது.

இந்த இருவழக்குகளும் நேற்று நாமக்கல் முதலாவது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. இதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திருச்சி சிறையில் இருந்து யுவராஜ், மதுரை சிறையில் இருந்து தங்கதுரை உள்பட 10 பேரும் அழைத்து வரப்பட்டு, நாமக்கல் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். பின்னர் இந்த வழக்கை வருகிற செப்டம்பர் மாதம் 4-ந் தேதிக்கு ஒத்திவைத்து மாஜிஸ்திரேட்டு ஜெயந்தி உத்தரவிட்டார்.

Next Story