செவிலியர்கள் பிரசவம் பார்த்ததில் குழந்தை சாவு: தோகைமலை அரசு சுகாதார நிலையத்தில் அதிகாரி விசாரணை


செவிலியர்கள் பிரசவம் பார்த்ததில் குழந்தை சாவு: தோகைமலை அரசு சுகாதார நிலையத்தில் அதிகாரி விசாரணை
x
தினத்தந்தி 18 July 2019 10:15 PM GMT (Updated: 18 July 2019 6:36 PM GMT)

செவிலியர்கள் பிரசவம் பார்த்ததில் குழந்தை இறந்த சம்பவம் குறித்து அரசு சுகாதார நிலையத்தில் வட்டார மருத்துவ அலுவலர் விசாரணை நடத்தினார்.

தோகைமலை,

கரூர் மாவட்டம், தோகைமலை அருகே உள்ள மேட்டு பிள்ளையார் கோவில் மேற்கு பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி ராஜேஸ்வரி (வயது 26). நிறைமாத கர்ப்பிணியான இவர், கடந்த 14-ந்தேதி தோகைமலையில் உள்ள அரசு மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையத்திற்கு பிரசவம் பார்க்க சென்றுள்ளார். இந்தநிலையில், கடந்த 16-ந்தேதி மாலையில் ராஜேஸ்வரிக்கு பிரசவவலி ஏற்பட்டது. அப்போது அங்கு டாக்டர்கள் இல்லாததால் ராஜேஸ்வரிக்கு அங்கிருந்த செவிலியர்கள் பிரசவம் பார்த்துள்ளனர். இதில் பிறந்த ஆண் குழந்தை சிறிது நேரத்தில் மூச்சுத்திணறி இறந்தது.

இதை மறைத்த செவிலியர்கள், ஒருமணி நேரம் கழித்து ராஜேஸ்வரியின் கணவர் மற்றும் உறவினர்களிடம் குழந்தைக்கு அதிக மூச்சுத் திணறல் ஏற்படுகிறது என்றும், இதற்கான கருவி இல்லாததால், நீங்கள் மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று குழந்தைக்கும், தாய்க்கும் சிகிச்சை அளித்து கொள்ளுங்கள் என்று கூறினர். இதையடுத்து 108 ஆம்புலன்ஸ் மூலம் மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு குழந்தையும், தாயும் அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு இருவரையும் மணப்பாறை டாக்டர்கள் பரிசோதனை செய்ததில், குழந்தை ஏற்கனவே இறந்து விட்டது என கூறினர்.

முற்றுகை

இதனால் ஆத்திரமடைந்த ராஜேஸ்வரியின் உறவினர்கள், டாக்டர்கள் இல்லாமல் நீங்களே (செவிலியர்கள்) பிரசவம் பார்த்ததால் தான் குழந்தை இறந்து விட்டது. குழந்தை இறந்ததை மறைத்து எங்களை அலைக்கழிக்கிறீர்கள் என்று கூறி தோகைமலை அரசு மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த குளித்தலை துணை போலீஸ் சூப்பிரண்டு சுகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து ராஜேஸ்வரி மணப்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

வட்டார மருத்துவ அலுவலர் விசாரணை

இந்தநிலையில் தோகைமலை வட்டார மருத்துவ அலுவலர் தியாகராஜன் நேற்று தோகைமலை அரசு மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையத்திற்கு சென்றார். பின்னர் செவிலியர்கள் பிரசவம் பார்த்தபோது குழந்தை இறந்தது குறித்தும், டாக்டர்கள் பணியில் இல்லாதது குறித்தும் அங்கிருந்த செவிலியர்கள் மற்றும் டாக்டர்களிடம் விசாரணை நடத்தினார். அதன்பின்னர் விசாரணை அறிக்கையை மேல்நடவடிக்கை எடுக்க மாவட்ட இணை இயக்குனர் (சுகாதாரம்) நிர்மல்சன்னுக்கு அனுப்பி வைத்தார். பின்னர் வட்டார மருத்துவ அலுவலர் நிருபர்களிடம் கூறுகையில், தோகைமலை அரசு மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையத்தில் 5 டாக்டர்கள் பணியில் இருக்க வேண்டிய நிலையில், ஆள் பற்றாக்குறை காரணமாக தற்போது 3 டாக்டர்கள் மட்டுமே பணிபுரிந்து வருகின்றனர். இந்த குழந்தையின் இறப்பிற்கு பிறகு இன்று முதல் (அதாவது நேற்று) காலையில் 2 டாக்டர்களும், இரவில் ஒரு டாக்டரும் பணியில் இருக்க தற்போது உத்தரவிட்டுள்ளேன். மேலும் காலியாக உள்ள 2 டாக்டர்களின் பணியிடங்களை நிரப்ப உயர் அதிகாரிக்கு பரிந்துரை செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Next Story