இந்திய விமானப்படை ஹெலிகாப்டர்கள் சாகச நிகழ்ச்சி


இந்திய விமானப்படை ஹெலிகாப்டர்கள் சாகச நிகழ்ச்சி
x
தினத்தந்தி 19 July 2019 4:45 AM IST (Updated: 19 July 2019 12:20 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சையில் இந்திய விமானப்படை ஹெலிகாப்டர்கள் சாகச நிகழ்ச்சி நடந்தது.

தஞ்சாவூர்,

1999-ம் ஆண்டு இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் கார்கில் என்ற இடத்தில் நடைபெற்ற போரில் இந்தியா வெற்றி பெற்றது. கார்கில் போர் நடந்து 20 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, இந்திய விமானப்படை சார்பில் நாட்டின் பல்வேறு ஊர்களுக்கு சென்று அதன் வெற்றி விழாவும், விமானப்படையின் சாகச நிகழ்ச்சியும் நடத்தப்பட்டு வருகின்றன.

இளைய தலைமுறையினர் வருங்காலத்தில் விமானப்படையில் சேர முன்வர வேண்டும் என்பதற்காக, அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்திய விமானப்படையில் ‘சாரங்’ எனப்படும் குழுவினர் ஹெலிகாப்டர் சாகச நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர். கோவை சூலூர் விமானப்படைத்தளத்தை மையமாக கொண்டு செயல்படும் இந்த குழுவினர் 6 ஹெலிகாப்டர்களில் தஞ்சாவூர் விமானப்படை தளத்துக்கு கடந்த சில தினங்களுக்கு முன் வந்து பல்வேறு ஒத்திகையில் ஈடுபட்டனர்.

சாகச நிகழ்ச்சி

இதையடுத்து நேற்று காலை 9.55 மணிக்கு ‘சாரங்’ ஹெலிகாப்டர் சாகச நிகழ்ச்சி தொடங்கியது. 20 நிமிடங்கள் நடைபெற்ற இந்த சாகச நிகழ்ச்சியில் 4 ஹெலிகாப்டர்கள் பங்கேற்றன. சுமார் 50 அடி முதல் 500 அடி உயரத்தில் வியப்பூட்டும் பல்வேறு சாகசங்களை ஹெலிகாப்டரில் இருந்தவாறு வீரர்கள் நிகழ்த்தி காட்டினர்.

ஒரு ஹெலிகாப்டரில் 3 வீரர்கள் வீதம் தலா 12 வீரர்கள் இதில் இடம் பெற்று இருந்தனர். இதில் 3 ஹெலிகாப்டர்கள் புகை கக்கியபடி சென்றன. இந்த ஹெலிகாப்டர்கள் 2 பிரிவாக பிரிந்து நேருக்கு நேர் வந்து 2 ஹெலிகாப்டர் களுக்கு இடையே செல்லும் காட்சியும், குறுக்காக சென்றும், தலைகீழாக, செங்குத்தாக மேல் நோக்கியும், சாய்வாக பறந்தும், வட்டமடித்து பல்வேறு வியப்பூட்டும் சாகசங்கள் நிகழ்த்தப்பட்டன.

மாணவ, மாணவிகள்

இந்த சாகச நிகழ்ச்சியை தஞ்சை விமானப்படை தளத்தின் கமாண்டர் பிரஜூவல்சிங் தொடங்கி வைத்தார்.

இதை பள்ளி, கல்லூரிகளை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கண்டுகளித்தனர்.

Next Story