நாசிக்கில் கைக்குழந்தையை கழுத்து அறுத்து கொன்று நாடகமாடிய தாய் கைது
நாசிக்கில் கைக்குழந்தையை கழுத்து அறுத்து கொன்று விட்டு நாடகமாடிய தாயை போலீசார் கைது செய்தனர்.
நாசிக்,
நாசிக் நகரில் உள்ள பாரடைஸ் என்ற அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் யோகிதா (வயது 26). இவருடைய கணவர் சுவாரா முகேஷ். இவர்களுக்கு 14 மாத குழந்தை இருந்தாள். இந்த நிலையில் நேற்று முன்தினம் தனது குழந்தையை கழுத்தில் வெட்டுக்காயத்துடன் அருகில் உள்ள மருத்துவமனைக்கு யோகிதா கொண்டுசென்றார்.
அங்கு நடத்திய பரிசோதனையில் குழந்தை இறந்துவிட்டது தெரியவந்தது.
இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தியபோது, காலையில் தான் குப்பை கொட்ட வெளியே சென்றிருந்த சமயத்தில் வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர் குழந்தையை கத்தியால் கழுத்தை அறுத்ததாகவும், இந்த சமயத்தில் வீட்டிற்குள் வந்த தன்னை அந்த ஆசாமி தாக்கியதாவும் யோகிதா கூறினார்.
ஆனால் இவரின் வாக்குமூலம் போலீசாருக்கு சந்தேகங்களை ஏற்படுத்தியது. யோகிதா கூறியது போல மர்ம ஆசாமி வந்ததற்கான தடயங்கள் எதுவும் சிக்கவில்லை. வீட்டில் பணமோ, நகையோ கொள்ளை போகவில்லை.
மேலும் கட்டிடத்தின் லிப்டில் ரத்த கரையுடன் பிளேடு ஒன்றும் கைப்பற்றப்பட்டது. அதில் இருந்தது யோகிதாவின் ரத்தம் என்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் யோகிதாதான் பெற்ற குழந்தையை கொடூரமாக கொலை செய்துவிட்டு, பிளேடால் தனது கையையும் அறுத்துக்கொண்டு நாடகமாடியது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். இருப்பினும் கொலைக்கான காரணம் தெரியவரவில்லை.
இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story