கோவையில், காரை நிறுத்திவிட்டு தப்பி ஓடிய சந்தன மர கடத்தல் கும்பல் - 7 கி.மீ. தூரம் துரத்தியும் போலீசாரால் பிடிக்க முடியவில்லை


கோவையில், காரை நிறுத்திவிட்டு தப்பி ஓடிய சந்தன மர கடத்தல் கும்பல் - 7 கி.மீ. தூரம் துரத்தியும் போலீசாரால் பிடிக்க முடியவில்லை
x
தினத்தந்தி 19 July 2019 4:30 AM IST (Updated: 19 July 2019 1:48 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் காரை நிறுத்தி விட்டு தப்பி ஓடிய சந்தன மர கடத்தல் கும்பலை போலீசார் 7 கி.மீ. தூரம் துரத்தியும் பிடிக்க முடியவில்லை.

இடிகரை,

கோவையில் கடந்த சில நாட்களாக சந்தன மரத்தை வெட்டி கடத்தும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எனவே கடத்தல் கும்பலை பிடிக்க போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். நேற்று முன்தினம் இரவு கோவை சாய்பாபாகாலனி முருகன் மில்லின் பின்பகுதியில் பொதுப்பாதையில் இருந்த சந்தன மரத்தை மர்ம கும்பல் வெட்டிக்கொண்டு இருந்தது.

இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் சாய்பாபாகாலனி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். ஆனால் போலீசார் வருவதற்குள், துண்டு துண்டாக வெட்டிய சந்தன மரத்தை காருக்குள் ஏற்றிக்கொண்டு மர்மகும்பல் தப்பிச்சென்றது.

இதையடுத்து போலீசார் மர்ம கும்பலை தேடும் பணியில் ஈடுபட்டனர். மேலும் போலீசார் பாரதி பூங்கா அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக ஒரு கார் வேகமாக வந்தது. அதை போலீசார் தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனால் அந்த கார் நிற்காமல் வேகமாக சென்றது.

இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் போலீஸ் ஜீப்பில் அந்த காரை பின்தொடர்ந்து துரத்தி சென்றனர். மருதமலை ரோட்டில் அந்த கார் அதிவேகத்தில் சென்றது. போலீசாரும் விடாமல் 7 கி.மீ. தூரம் காரை துரத்தி சென்றனர். பி.கே.புதூர் அருகே சென்றபோது அந்த மர்மகும்பல் திடீரென்று காரை நிறுத்தினர். பின்னர் காரில் இருந்து இறங்கி மர்ம ஆசாமிகள் 4 பேரும் தப்பி ஓடினார்கள்.

உடனே போலீசாரும் அவர்களை பிடிக்க துரத்தி சென்றனர். ஆனால் போலீசாரால் மர்ம கும்பலை பிடிக்க முடிய வில்லை. இதையடுத்து போலீசார் அந்த கும்பல் நிறுத்தி சென்ற காரை சோதனை செய்தனர். அதில் சந்தனமரத்தை வெட்டுவதற்கான அரிவாள், ரம்பம் உள்ளிட்ட பொருட்களும், காரின் பின்பகுதியில் துண்டு துண்டாக வெட்டப்பட்ட சந்தன மரக்கட்டைகளும் இருந்தன. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய 4 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

சந்தன மரத்தை வெட்டி காரில் கடத்திய மர்ம ஆசாமிகள் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்கள்? என்பது தெரியவில்லை. எனவே அவர்களை கண்டுபிடிக்கும் வகையில், மேட்டுப்பாளையம் ரோடு, பாரதி பார்க், தடாகம் ரோடு, மருதமலை ரோடு பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story