தென்காசி தனி மாவட்டமாக அறிவிப்பு: பொதுமக்களுக்கு அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
தென்காசி தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அ.தி.மு.க.வினர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள்.
தென்காசி,
நெல்லை மாவட்டம் மிகப்பெரிய மாவட்டமாக உள்ளது. மாவட்ட தலைமை அரசு அலுவலகங்களுக்கு சிவகிரி, சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர், புளியங்குடி, கடையநல்லூர், செங்கோட்டை, பாவூர்சத்திரம், ஆலங்குளம் ஆகிய ஊர்களில் இருந்து பொதுமக்கள் நெல்லைக்கு சென்று வருகிறார்கள். எனவே நெல்லை மாவட்டத்தை இரண்டாக பிரித்து தென்காசியை தலைமையாக கொண்டு தனி மாவட்டம் உருவாக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு தென்காசியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தென்காசியை தனி மாவட்டமாக பிரிக்க வேண்டும் என்று செல்வமோகன்தாஸ் பாண்டியன் எம்.எல்.ஏ. என்னை பார்க்கும் போது எல்லாம் கூறுவார். இந்த கோரிக்கை பரிசீலனையில் உள்ளது என்று தெரிவித்தார்.
இந்த நிலையில் தென்காசியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உதயமாகிறது என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் அறிவித்தார். இதையடுத்து தென்காசியில் அ.தி.மு.க.வினர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள். தென்காசி சுவாமி சன்னதி பஜார் முன்பு நடந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் சங்கர பாண்டியன், மேலகரம் செயலாளர் கார்த்திக்குமார், இலஞ்சி செயலாளர் மயில்வேலன், சைரஸ், கூட்டுறவு சங்க தலைவர் சுரேஷ், மாரியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து தென்காசியை சேர்ந்த மாடசாமி ஜோதிடர் கூறுகையில், இந்த அறிவிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. பராக்கிரம பாண்டியன் கட்டிய காசிவிசுவநாத சுவாமி கோவிலில் சேதமடைந்த சமயத்தில் தென்காசி நகரம் களை இழந்து காணப்பட்டது. பின்னர் இந்த கோவிலில் ராஜகோபுரத்தை தினத்தந்தி அதிபர் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் முயற்சியால் சீரமைக்கப்பட்டது. அதன் பின்னர் தென்காசி நகரமே பொலிவு பெற்று செழுமை அடைந்தது. அதன்பிறகு ஒவ்வொரு வளர்ச்சியாக வந்து இன்று மாவட்ட தலைநகரமாக மாறி உள்ளது. இதற்கு இந்த ராஜகோபுரம் உருவானதே காரணம் என்றார்.
கோவில் அருகே பழக்கடை நடத்தி வரும் சலீம் கூறும்போது, வெகு நாட்களாக எதிர்பார்த்த இந்த அறிவிப்பு இதோடு நின்று விடாமல் இதற்கான அலுவலகங்களை உடனடியாக அமைத்து விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும். மேலும் அடிப்படை வசதிகளை சீரமைக்க வேண்டும் என்றார்.
தென்காசி தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து புளியங்குடியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், மனிதநேய மக்கள் கட்சி சார்பில் இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. ம.ம.க. மாவட்ட செயலாளர் பஷீர் ஒலி தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
இதில் துணை தலைவர் அப்துர் ரகுமான், த.மு.மு.க. ஊடகப்பிரிவு மாவட்ட செயலாளர் அமீது, ம.ம.க. இளைஞர் அணி மாவட்ட பொருளாளர் சாகுல் அமீது, புளியங்குடி நகர வர்த்தக சங்க செயலாளர் ஷாஜகான், த.மு.மு.க. நகர செயலாளர் சாகுல் அமீது உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தென்காசியை தலைமையாக கொண்டு தனி மாவட்டம் அறிவித்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு வாஞ்சி இயக்கம் சார்பில் நிறுவன தலைவர் ராமநாதன் நன்றி தெரிவித்துள்ளார்.
சுரண்டை அண்ணா சிலை அருகே சுரண்டை நகர அ.தி.மு.க. செயலாளர் வி.கே.எஸ்.சக்திவேல் தலைமையில், பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இதில் மாரியப்பன், ராஜேஷ், செல்வம், பிரியா ராசு, ஜெயபிரகாசம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story