கோவில்பட்டியில் நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தை பா.ஜனதாவினர் முற்றுகை ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை
கோவில்பட்டியில் ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தி, நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தை பா.ஜனதாவினர் முற்றுகையிட்டனர்.
கோவில்பட்டி,
கோவில்பட்டியில் லட்சுமி மில் மேம்பாலம் முதல் லாயல் மில் மேம்பாலம் வரையிலும் சுமார் ரூ.7 கோடி செலவில் நாற்கர சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. எனவே அந்த வழித்தடத்தில் உள்ள ஓடை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று வலியுறுத்தி, பா.ஜனதாவினர் நேற்று கோவில்பட்டி பயணியர் விடுதி வளாகத்தில் உள்ள நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
நகர தலைவர் வேல்ராஜா, நகர பொதுச்செயலாளர்கள் தினேஷ்குமார், பாலசுப்பிரமணியன், மாவட்ட வர்த்தக அணி தலைவர் ராஜ்குமார், இளைஞர் அணி தலைவர் மாரிசெல்வம், பிற்படுத்தப்பட்டோர் அணி தலைவர் வக்கீல் நீதிபாண்டியன், உள்ளாட்சி பிரிவு தலைவர் முனிராஜ், துணை தலைவர் சீனிவாசன், பிரசார அணி துணை தலைவர் லட்சுமணகுமார், நகர பொருளாளர் மாரிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முற்றுகையிட்டவர்களிடம் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் ராஜூ பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர், கோவில்பட்டியில் நாற்கரசாலை அமைக்கும் பணிக்காக, சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. மின்கம்பங்களும் இடமாற்றம் செய்யப்பட்டன.
7 மீட்டர் அகலம் இருந்த பழைய சாலையின் இருபுறமும் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி, 15 மீட்டர் அகலத்துக்கு நாற்கர சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. ஓடை ஆக்கிரமிப்புகளை வருவாய் துறையினரே அகற்ற முடியும் என்று கோட்ட பொறியாளர் தெரிவித்தார். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story