தூத்துக்குடியில், ரூ.50 ஆயிரம் மதிப்பிலான குட்கா பதுக்கி விற்பனை செய்த மளிகைக்கடைக்காரர் கைது


தூத்துக்குடியில், ரூ.50 ஆயிரம் மதிப்பிலான குட்கா பதுக்கி விற்பனை செய்த மளிகைக்கடைக்காரர் கைது
x
தினத்தந்தி 19 July 2019 3:30 AM IST (Updated: 19 July 2019 2:01 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் குட்காவை பதுக்கி விற்பனை செய்த மளிகைக்கடைக்காரரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள குட்காவை பறிமுதல் செய்தனர்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி செல்வநாயகபுரத்தை சேர்ந்தவர் செந்தூர்பாண்டியன். இவரின் மகன் கந்தசாமி (வயது 35). இவர் அதே பகுதியில் ஒரு மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று காலையில் இவர் கடையில் குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக தூத்துக்குடி வடபாகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிகுமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் ரவிகுமார் தலைமையிலான போலீசார் அந்த கடைக்குச் சென்றனர்.

மளிகை கடையில் போலீசார் அதிரடி சோதனை நடத்திய போது அங்கு 3 மூடைகளில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்ததும், அவைகளை கந்தசாமி விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த சுமார் 20 கிலோ எடையுள்ள குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட குட்காவின் மதிப்பு ரூ.50 ஆயிரம் என போலீசார் தெரிவித்தனர்.

இதனையடுத்து கந்தசாமி மீது தூத்துக்குடி வடபாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

Next Story