புதிய பாடத்திட்டம் குறித்து பயிற்சி, வகுப்புக்கு தகுந்த கற்றல் திறன் மாணவர்களுக்கு அவசியம் - தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு அறிவுரை
புதிய பாடத்திட்டத்தில் வகுப்புக்கு தகுந்த கற்றல் திறனை மாணவர்கள் அவசியம் அடைந்து இருக்க வேண்டும் என்று பயிற்சி முகாமில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
திண்டுக்கல்,
தமிழக கல்வித்துறையில் அதிரடியாக பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்தும் வகையில் பாடத்திட்டம் மாற்றப்பட்டது. அதன்படி இந்த கல்வி ஆண்டில் 2 முதல் 5-ம் வகுப்பு வரை புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையொட்டி தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு புதிய பாடத்திட்டம் தொடர்பாக பயிற்சி அளிக்கப்படுகிறது.
அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிகளில் சுமார் 4 ஆயிரத்து 500 ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களுக்கு பல்வேறு கட்டங்களாக பயிற்சி அளிக்கப்படுகிறது. இதையொட்டி மாவட்ட அளவிலான பயிற்சி முகாம், திண்டுக்கல்லில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் நடைபெற்றது.
இதில் ஆசிரிய பயிற்றுனர்கள் மற்றும் ஆசிரியர்கள் என மொத்தம் 140 பேர் கலந்து கொண்டனர். 10 பயிற்சியாளர்கள் கலந்து கொண்டு புதிய பாடத்திட்டம் குறித்து பயிற்சி அளித்தனர். அப்போது புதிய பாடத்திட்டத்தின் நோக்கம், அதனை மாணவர்கள் கற்க வேண்டிய அவசியம் குறித்து விளக்கப்பட்டது. மேலும் ஒவ்வொரு வகுப்புக்கு தகுந்த கற்றல் திறனை மாணவர்கள் கட்டாயம் பெற்றிருக்க வேண்டும்.
இதற்காக அனைத்து மாணவர்களையும் கவனத்தில் கொண்டு பாடம் கற்பிக்க வேண்டும். மொழி பாடங்களில் வாசித்தல், எழுதுதல், இலக்கண அறிவை முழுமையாக தெரிந்து இருக்க வேண்டும். அதேபோல் கணிதம், சூழ்நிலையியல் பாடங்களில் அடிப்படை விஷயங்களை கற்றுக்கொடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
மேலும் புதிய பாடப்புத்தகங்களில் இடம்பெற்ற பாடங்களை கற்பிப்பது குறித்து செயல்முறை விளக்கம், ஒளிப்பட விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த பயிற்சியில் ஒருங்கிணைந்த கல்வி இயக்ககத்தின் உதவி மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜான்பிரிட்டோ, பயிற்சி ஒருங்கிணைப்பாளர் ஜெயலட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Related Tags :
Next Story