சட்டசபை கூட்டத்தில் பங்கேற்காத 20 எம்.எல்.ஏ.க்கள் மும்பையில் தங்கியுள்ள 3 பேருடன் சித்தராமையா சமரச பேச்சு


சட்டசபை கூட்டத்தில் பங்கேற்காத 20 எம்.எல்.ஏ.க்கள் மும்பையில் தங்கியுள்ள 3 பேருடன் சித்தராமையா சமரச பேச்சு
x
தினத்தந்தி 19 July 2019 4:40 AM IST (Updated: 19 July 2019 4:40 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடக சட்டசபை கூட்டத்தில் நேற்று 20 எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்கவில்லை. இந்த நிலையில் எம்.எல்.ஏ.க்கள் பதவியை ராஜினாமா செய்து மும்பையில் தங்கியுள்ள 3 பேருடன் முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா பேசியுள்ளார் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது.

பெங்களூரு,

கர்நாடக சட்டசபையில் நேற்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று கூறப்பட்டு இருந்தது. இருப்பினும் நேற்றைய சட்டசபை கூட்டத்தில் மொத்தம் 20 எம்.எல்.ஏ.க்கள் கலந்துகொள்ளவில்லை.

இதில் 15 பேர் தங்களின் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து கடிதம் கொடுத்துள்ளதும், அவர்களின் கடிதம் இன்னும் அங்கீகரிக்கப்படாமலும் உள்ளது.

நேற்றைய சட்டசபை கூட்டத்தில் கலந்துகொள்ளாத எம்.எல்.ஏ.க்களின் பெயர் விவரங்கள் வருமாறு:-

பைரதி பசவராஜ் (கே.ஆர்.புரம் தொகுதி), முனிரத்னா (ராஜராஜேஸ்வரிநகர்), எஸ்.டி.சோமசேகர் (யஷ்வந்தபுரம்), ரமேஷ் ஜார்கிகோளி (கோகாக்), எம்.டி.பி. நாகராஜ் (ஒசக்கோட்டை), பி.சி.பட்டீல் (ஹிரேகெரூர்), சுதாகர் (சிக்பள்ளாப்பூர்), சிவராம் ஹெப்பார் (எல்லாப்பூர்), பிரதாப் கவுடா பட்டீல் (மஸ்கி), மகேஷ் குமடள்ளி (அதானி) ரோஷன் பெய்க் (சிவாஜிநகர்), ஆனந்த் சிங் (பல்லாரி விஜயநகர்), நாகேந்திரா (பல்லாரி புறநகர்), ஸ்ரீமந்த் பட்டீல் (காக்வாட்) ஆகியோர் காங்கிரஸ் கட்சிகளை சேர்ந்தவர்கள் ஆவார்கள். இதில் நாகேந்திரா, ஸ்ரீமந்த் பட்டீல் ஆகியோர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மற்றவர்கள் தங்களின் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

இதேபோல் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த ஜனதாதளம்(எஸ்) கட்சியை சேர்ந்த கோபாலய்யா (மகாலட்சுமி லே-அவுட்), நாராயணகவுடா (கே.ஆர்.பேட்டை), விஸ்வநாத் (உன்சூர்) ஆகியோரும், பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த என்.மகேஷ் (கொள்ளேகால்), சுயேச்சை எம்.எல்.ஏ.க்களான சங்கர் (ராணிபென்னூர்), நாகேஷ் (முல்பாகல்) ஆகியோரும் நேற்று சட்டசபைக்கு வரவில்லை. இதில் கொள்ளேகால் எம்.எல்.ஏ. என்.மகேஷ் கூட்டணி அரசுக்கு ஆதரவாக இருப்பதாக கூறினார். ஆனால் நேற்று அவர் சட்டசபைக்கு வராதது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தவர்களில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 10 பேர் மும்பையில் உள்ளனர். இவர்களில் 3 பேரை நேற்று முன்தினம் இரவு முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா செல்போனில் தொடர்பு கொண்டு சமரசம் பேசியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த வேளையில் ராஜினாமா கடிதத்தை திரும்ப பெற சித்தராமையா வலியுறுத்தியுள்ளார். இருப்பினும் அந்த 3 எம்.எல்.ஏ.க்கள் யார்?, சித்தராமையாவுக்கு அவர்கள் என்ன பதில் அளித்தனர்? என்பன போன்ற விவரங்கள் தெரியவில்லை.

இதனால் கர்நாடக அரசியலில் அடுத்தடுத்து திருப்பங்கள் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story